புதுப்பெண் சாவில் மர்மம்
புதுப்பெண் சாவில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.;
விருதுநகர் அருகே உள்ள கடம்பங்குளத்தை சேர்ந்தவர் சரவணகுமார். இவருக்கும் சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஆறுமுகம் என்பவருடைய மகள் தீபாவுக்கும் (வயது 26) கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி திருமணம் நடந்தது.
இந்தநிலையில் தீபா தனது தாயார் மீனாட்சியை தொடர்பு கொண்டு சரவணகுமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் அந்த பெண் சரவணகுமாருக்கு செல்போனில் தகவல் அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர், மகளுக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதற்கிடையே சரவணகுமாருக்கும், தீபாவிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தினசரி தனது தாயார் மீனாட்சியிடம் பேசும் தீபா சம்பவத்தன்று பேசவில்லை. அவரது தாயார் விசாரித்ததில், வீட்டில் தூக்குப்போட்டு தீபா தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.
பின்னர் சென்னையில் இருந்து வந்த மீனாட்சி, சூலக்கரை போலீசில் கொடுத்த புகாரில் தனது மகள் தீபாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, புதுப்பெண் மர்ம சாவு பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.