மனைப்பட்டா கேட்டு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் விக்கிரவாண்டியில் பரபரப்பு

மனைப்பட்டா கேட்டு விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-20 18:45 GMT

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அருகே தென்னமாதேவி கிராமத்தில் வசிக்கும் மாற்று திறனாளிகள் 37 பேர் நேற்று காலை பெட்டி, பாத்திரங்களுடன் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு மனைப்பட்டா வழங்க கோரி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் சங்க கோலியனூர் ஒன்றிய தலைவர் மும்மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். விக்கிரவாண்டி ஒன்றிய தலைவர் அய்யனார், வக்கீல் கண்ணப்பன், மாவட்ட குழு உறுப்பினர் மணிகண்டன் மோகன் ஆகியோர் சங்க கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர். அப்போது தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமாரி மன்னன் போராட்டக் குழுவினரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, மனைப்பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. 

Tags:    

மேலும் செய்திகள்