மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது
நாகர்கோவிலில் சாலையில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திடீரனெ தீப்பிடித்து எரிந்தது முற்றிலுமாக நாசமானது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் சாலையில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திடீரனெ தீப்பிடித்து எரிந்தது முற்றிலுமாக நாசமானது.
மோட்டார் சைக்கிளில் திடீர் தீ
தென்காசி மாவட்டம் ராயகிரி பகுதியை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 35). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு மருந்து விற்பனை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். எனவே இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருக்கிறார்.
இந்தநிலையில் நேற்று காலை 11 மணிக்கு ராஜாராம் தனது மனைவி, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் மணிமேடைக்கு வந்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளை அங்குள்ள ஒரு டீக்கடை முன்பு நிறுத்தி விட்டு டீக்குடிக்க சென்றனர். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
முற்றிலும் எரிந்து நாசம்
உடனே ராஜாராம் மற்றும் அங்குள்ள கடைக்காரர்கள் குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து பற்றி எரிந்த தீயின் மீது ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ அணையவில்லை. உடனே இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. பின்னர் தீ விபத்து குறித்து நடந்த முதற்கட்ட விசாரணையில், மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்கில் அதிகளவில் பெட்ரோல் நிரப்பப்பட்டு இருந்துள்ளது. வெயிலின் வெப்பத்தாலும், என்ஜின் சூட்டினாலும் மோட்டார் சைக்கிளில் தீப்பற்றி இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
பெரும் விபத்து தவிர்ப்பு
இதற்கிடையே பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இந்த தீ விபத்தால் மணிமேடை பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தீ அணைக்கப்பட்ட பிறகு போக்குவரத்து சீராக தொடங்கியது. மேலும் தீ விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் மற்ற வண்டிகளுடன் நிறுத்தாமல் தனியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மற்ற மோட்டார் சைக்கிளுடன் நிறுத்தியிருந்தால் நேற்று மட்டும் ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் தீ விபத்தில் சிக்கி எரிந்து நாசமாகி இருக்கும் எனவும் தீயணைப்பு வீரர்கள் கூறினர்.