கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் தாயும் பலி

மணவாசி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் தாயும் பலியானார்.

Update: 2022-10-23 18:30 GMT

கார் பள்ளத்தில் கவிழ்ந்தது

கரூர் வெங்கமேட்டை சேர்ந்தவர் திவாகர் (வயது 34). இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் திவாகர் சென்னையில் தனது மனைவி கீர்த்தனா (30), மகள் சஸ்மிதாவுடன் (2½) அங்கு வசித்து வந்தார். இந்தநிலையில் தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து திவாகர் தனது காரில், மனைவி கீர்த்தனா, மகள் சஸ்மிதாவை அழைத்து கொண்டு கரூர் வெங்கமேட்டிற்கு வந்து கொண்டு இருந்தார்.

அந்த கார் நேற்று முன்தினம் மதியம் கரூர் மாவட்டம் மணவாசி டோல்பிளாசா அருகே கட்டளை பிரிவு சாலை பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புச்சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

தாயும் பலி

இதில், காரின் இடிபாடுகளில் சிக்கி சஸ்மிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள். திவாகர், கீர்த்தனா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 2 பேரும் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு கீர்த்தனாவிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் இரவு கீர்த்தனாவை மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கீர்த்தனாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் குழந்தையும், தாயும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்