பெண்ணின் ஸ்கூட்டர் சாவியை எடுத்து சென்ற குரங்கு

குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் பெண்ணின் ஸ்கூட்டர் சாவி, பையை தூக்கி சென்ற குரங்கு வாழைப்பழம் கொடுத்தும் வீசி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update:2023-08-11 00:15 IST

குழித்துறை, 

குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் பெண்ணின் ஸ்கூட்டர் சாவி, பையை தூக்கி சென்ற குரங்கு வாழைப்பழம் கொடுத்தும் வீசி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குழித்துறை நகராட்சி அலுவலகம்

குழித்துறை நகராட்சி அலுவலகம் மார்த்தாண்டம் வெட்டுமணியில் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் பிறப்பு இறப்பு பதிவு அலுவலகம், ஆதார் இ-சேவை மையம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இதனால் இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்காக வந்து செல்கின்றார்கள்.

இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 21-ந் நகராட்சி ஊழியர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் சாவியை வைத்து விட்டு அலுவலகத்துக்குள் சென்றார். பின்னர் அவர் திரும்ப வந்த போது மோட்டார் சைக்கிள் சாவியை ஒரு குரங்கு தூக்கி சென்று சிறிது நேரம் போக்கு காட்டியது. பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பின்பு குரங்கு சாவியை ஊழியர் மீது வீசி விட்டு சென்றது.

மீண்டும் சேட்டை

இந்தநிலையில் தற்போது மீண்டும் அதே குரங்கு பெண்ணின் ஸ்கூட்டர் சாவி மற்றும் பையை தூக்கி சென்று சிறிது நேரம் போக்கு காட்டியது. அதன் விவரம் வருமாறு:-

குழித்துறை நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் இ-சேவை மையத்திற்கு நேற்று முன்தினம் ஒரு பெண் தனது ஸ்கூட்டரில் வந்தார். அவர் தனது பையையும் ஸ்கூட்டர் சாவியையும் கூட்டரில் வைத்து விட்டு அலுவலகத்திற்குள் சென்றார்.

இதை நகராட்சி ஊழியரின் மோட்டார் சைக்கிள் சாவியை தூக்கி சென்ற குரங்கு அங்குள்ள மரக்கிளையில் பதுங்கி இருந்தவாறு பார்த்து கொண்டிருந்தது. அந்த குரங்கு மெதுவாக தாவி வந்து பெண்ணின் ஸ்கூட்டர் மீது ஏறி அமர்ந்தது.

இதைக்கண்ட அந்த பெண் அந்த குரங்கை விரட்டினார். உடனே குரங்கு கோபத்துடன் ஸ்கூட்டரில் இருந்த பையையும் சாவியையும் தூக்கி கொண்டு மரக்கிளையில் தாவி ஏறியது.

போக்கு காட்டிய குரங்கு

பின்னர் மரக்கிளையில் ரொம்ப சொகுசாக அமர்ந்து பையை திறந்து தனக்கு பிடித்த உணவு ஏதாவது இருக்கிறதா? என்று பார்த்தது. ஆனால் அதில் உணவு பொருட்கள் எதுவும் இல்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த குரங்கு மரக்கிளையில் இருந்து அருகில் இருந்த கட்டிட கூரை மீது தாவி அங்கும் இங்கும் நடந்தது.

அப்போது அந்தப் பெண்ணும், அங்கு நின்றவர்களும் குரங்கிடம் இருந்து பையையும் சாவியையும் பெற முயற்சிகள் செய்தனர். இதையடுத்து அந்த குரங்கு பையில் எதுவும் இல்லாததால் அதை மட்டும் கீழே தூக்கி வீசியது.

இதையடுத்து சாவியை பெற பல வழிகளில் முயற்சி செய்தனர். ஆனால் குரங்கு சாவியை வாயில் வைத்து அங்கும் இங்குமாக நடந்தும், மரக்கிளையில் தாவியும் ேபாக்கு காட்டி கொண்டிருந்தது.

வழைப்பழம் கொடுத்து

இந்தநிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. அவர் பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று ஒரு வாழைப்பழத்தை வாங்கி வந்து குரங்கை நோக்கி வீசினார். உடனே அதை லாவகமாக பிடித்து கொண்டது. தொடர்ந்து அந்த குரங்கு பழம் கிடைத்த மகிழ்ச்சியில் சாவிக்கொத்தை அந்த பெண்ணை நோக்கி வீசியது. 

Tags:    

மேலும் செய்திகள்