கண்டக்டரை சரமாரியாக தாக்கி பஸ் கண்ணாடியை உடைத்த கும்பல்

வேடசந்தூர் அருகே கண்டக்டரை சரமாரியாக தாக்கி பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-10-15 22:15 GMT

கண்டக்டர் மீது தாக்குதல்

ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூர் பஸ்நிலையத்துக்கு நேற்று மாலை 5 மணி அளவில் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் டிரைவராக ஆயக்குடிைய சேர்ந்த கதிரேசன் (வயது 35), கண்டக்டராக சாமியார்புதூரை சேர்ந்த செல்வராஜ் (29) ஆகியோர் இருந்தனர்.

வேடசந்தூர் வந்ததும், கண்டக்டர் செல்வராஜ் பஸ்சை விட்டு இறங்கி பஸ்நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடைக்கு நடந்து சென்றார். அப்போது ஆட்டோவில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தது. அவர்கள் ஆட்டோவை செல்வராஜ் மீது மோதுவது போல் ஓட்டினர். இதனால் அவர் சுதாரித்து கொண்டு விலகினார். மேலும் ஆத்திரமடைந்த செல்வராஜ், அந்த ஆட்டோவின் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆட்டோவில் இருந்து இறங்கிய கும்பல், அவரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றது.

பஸ் கண்ணாடி உடைப்பு

இதில், படுகாயம் அடைந்த செல்வராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து மாலை 5.45 மணிக்கு அந்த தனியார் பஸ் வேடசந்தூரில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி புறப்பட்டது. பஸ்சில் மாற்று கண்டக்டராக மனோஜ் என்பவர் வந்தார். பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். வேடசந்தூர் அருகே சேனன்கோட்டை பஸ் நிறுத்தத்தை கடந்து சென்றபோது, செல்வராஜை தாக்கிய அதே கும்பல் ஆட்டோவில் வந்து பஸ்சை வழிமறித்தது. மேலும் பஸ் மீது கல்வீசி தாக்கியது.

3 பேர் காயம்

இதை பார்த்து பஸ்சில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். உடனே அந்த கும்பல் ஆட்டோவில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்றது. கல்வீச்சில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து, டிரைவர் கதிரேசன் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலுமணி, பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் தப்பியோடிய மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கண்டக்டரை தாக்கிவிட்டு, பஸ் கண்ணாடியை மர்ம கும்பல் உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்