மதுரையில் வறுமை ஏற்படுத்திய பரிதாபம்:டாக்டர் குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

மதுரையில் டாக்டரின் மனைவி, மகள், மகன் என 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர். அவர்களது உடல்களை வீட்டின் கதவை உடைத்து போலீசார் மீட்டனர்.

Update: 2023-08-17 20:11 GMT


மதுரையில் டாக்டரின் மனைவி, மகள், மகன் என 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர். அவர்களது உடல்களை வீட்டின் கதவை உடைத்து போலீசார் மீட்டனர்.

சுகாதாரத்துறை அதிகாரி

மதுரை அண்ணாநகரை அடுத்துள்ள கோமதிபுரத்தில் அன்புநகர் ராஜராஜன் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். டாக்டரான இவர் மதுரையில் சுகாதாரத்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி வாசுகி (வயது 67). இவர்களுடைய மகள் உமாதேவி (45), மகன் கோதண்டபாணி (42).

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக டாக்டர் பாண்டியன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இவருடைய மகன், மகள் திருமணம் செய்து கொள்ளவில்லை.

மகன் கோதண்டபாணியும், மகள் உமாதேவியும் கிடைத்த வேலையை செய்துகொண்டு தாய் வாசுகியுடன் வசித்து வந்தனர். அவர்கள் 3 பேரும் சரிவர அக்கம்பக்கத்தினருடன் பேசாமல் இருந்துள்ளனர்.

3 பேர் தற்கொலை

இந்த நிலையில் சில நாட்களாக அவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது. அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் நேற்று இதுகுறித்து அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கோதண்டபாணி தூக்கில் தொங்கிய நிலையிலும், அவருடைய தாய் வாசுகி, அக்காள் உமாதேவி ஆகியோர் விஷம் குடித்தும் பிணமாக கிடந்தனர். 3 பேரின் உடல்களும் அழுகிய நிலையில் இருந்ததால் அவர்கள் இறந்து சில நாட்கள் ஆகி இருக்கலாம் என தெரியவந்தது. 3 பேரின் உடல்களையும் பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாட்டிய வறுமை

முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:- டாக்டராகவும், சுகாதாரத்துறையில் அதிகாரியாகவும் இருந்த பாண்டியன் பிரிந்து சென்றபின்பு, வாசுகியும், அவருடைய மகன், மகள் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளனர். 40 வயதை கடந்தபின்பும் மகன், மகளுக்கு திருமணம் நடக்கவில்லை. இதனால் அவர்களது எதிர்காலம் என்னவாகுமோ? என வாசுகி மிகுந்த கவலை அடைந்தார். கையில் இருந்த பணம் காலியானதால், நகை மற்றும் பொருட்களை விற்று வாழ்ந்து வந்தனர்.

சில மாதங்களாக உணவுக்கு வழியின்றி வறுமை வாட்டியது. வீட்டிற்கு மின் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்துள்ளனர். அதனால் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் இல்லாததால் அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீருக்கு கூட மற்றவர்களை நம்பி இருக்கும் நிலையில் தவித்துள்ளனர். பணக்கஷ்டத்தால் 3 பேரும் தற்கொலை செய்துகொள்ளும் விபரீத முடிவு எடுத்துள்ளனர்.

இந்தநிலையில்தான் வாசுகி, உமாதேவி விஷம் குடித்தும், கோதண்டபாணி தூக்கில் தொங்கியும் தற்கொலை செய்துள்ளனர். ஆனால், குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற பாண்டியனின் நிலை என்ன? என்பது குறித்து தெரியவில்லை.

இவ்வாறு போலீசார் கூறினா். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்