இடநெருக்கடியால் மரத்தடியில் பாடம் நடத்தும் அவலம்

தியாகதுருகம் அரசு தொடக்கப்பள்ளியில் இட நெருக்கடியால் மரத்தடியில் பாடம் நடத்த வேண்டிய அவலம் உள்ளது

Update: 2022-09-06 15:23 GMT

கண்டாச்சிமங்கலம்

தொடக்கப்பள்ளி

தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகர் பகுதியில் 1981-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு கஸ்தூரிபாய் நகர், அம்மன் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 78 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பள்ளியில் ஒரே ஒரு ஓட்டு கட்டிடம் மட்டுமே உள்ளது. மிகவும் குறுகலான இந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் 1 மற்றும் 2-ம் வகுப்புகளுக்கும் மற்றொரு பகுதியில் 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கும் பாடம் நடத்தப்படுகிறது. போதிய இட வசதி இல்லாததால் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியின் வெளியே உள்ள மரத்தடியில் பாடம் நடத்தப்படுகிறது.

இட நெருக்கடி

மேலும் இடநெருக்கடியால் ஒரே அறையில் 4 வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாத அவல நிலையும் உள்ளது. இது தவிர கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள ஓடுகள் ஆங்காங்கே உடைந்து உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் உடைந்த ஓடுகள் வழியாக உள்ளே புகுந்து வகுப்பறை முழுவதும் தண்ணீர் தேங்கி குளமாக மாறிவிடுகிறது. இதனால் மழை பெய்யும் போது பாதுகாப்பு கருதி 5-ம் வகுப்பு மாணவர்களை தவிர மீதமுள்ள 4 வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பிவிடுவதாக கூறப்படுகிறது.

புதிய கட்டிடம்

இது குறித்து இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கியுள்ள இந்த காலத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் பள்ளிக்கட்டிடங்களின் மீதும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு உடனடியாக புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்