யாரை பாதுகாக்க சுகாதாரத்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி

தி.மு.க. அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஆதாரங்களுடன் அறிக்கையாக வெளியிடுவோம் என்று ராமநாதபுரத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

Update: 2022-06-06 12:54 GMT


பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று ராமநாதபுரம் வந்தார். சமீபத்தில் காலமான ராமநாதபுரம் இளையமன்னர் குமரன்சேதுபதி இல்லத்திற்கு சென்று அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குமரன் சேதுபதி இறப்பு நமக்கு மிகப்பெரிய இழப்பு. ராஜா குமரன்சேதுபதி தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்பது கோவில், மசூதி, சர்ச் உள்ளிட்ட எந்த வழிபாட்டுதலங்களுக்குள்ளும் சென்று இப்படித்தான் நடக்க வேண்டும் என்று சொல்லும் அருகதை அரசுக்கு இல்லை என்பதாகும்.

ஆனால், தற்போது தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கோவில்களை மட்டும் சுற்றி சுற்றி வந்து பெரிய இடையூறுகளை கொடுத்து கொண்டு வருகின்றனர். ஒரு ஆதினமே அரசியல் வாதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாக சொல்கிறார் என்றதால் அவருக்கு எவ்வளவு தாக்கம் இருக்க வேண்டும்.

முற்றும் துறந்தவர்களின் மனதில் இருந்து இவ்வாறு கூறும் அளவிற்கு இந்த தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதனை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் எங்களின் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அது முற்றிலும் தவறானது. அதில் உண்மையான தகவல்களை மறைத்து தவறான சில தகவல்களை கொடுத்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அதற்கு உரிய ஆதாரங்களை இணைத்து பா.ஜ.க. சார்பில் அறிக்கையாக வெளியிடப்படும். இந்த குற்றச்சாட்டில் நாங்கள் கூறுவது என்னவென்றால் இந்த ஊழல் புகாரில் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினரின் மகனும். தி,மு.க. குடும்பத்தை சேர்ந்த முக்கிய புள்ளியும் நேரிடையாக சம்பந்தப்பட்டுள்ளனர்.

யாரை பாதுகாக்க அதனை மறைத்து சுகாதாரத்துறை அமைச்சர் இவ்வாறு கூறுகிறார் என்று தெரியவில்லை.

தற்போது தமிழகத்தில் எல்லா சினிமாக்களையும் ஒரே ஓரு நிறுவனம் மட்டுமே வாங்கி எப்படி வெளியிடுகிறதோ அதேபோல தான் ஜீஸ்கொயர் நிறுவனத்தையும் நில விற்பனையில் அரசு செல்வாக்கை தவறாக பயன்படுத்தி உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.

எங்களை பொறுத்தவரை அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் முழு பாதுகாப்புடன் எங்கும் சென்று வருகிறார். சென்னையில் சில பகுதிகளுக்கு அவரை கூட்டிக்கொண்டு செல்ல விரும்புகிறேன். சென்னையில் பட்டப்பகலில் ரவுடிகள் எவ்வாறு சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பொதுமக்களிடம் அராஜகம் செய்கின்றனர் என்பதை காட்ட விரும்புகிறேன்.

விருதுநகருக்கு கூட்டி வந்து பாலியல் பலாத்காரத்தில் பெண்ணை எவ்வாறு கொடுமை படுத்தி உள்ளனர் என்று காட்ட விரும்புகிறேன். முதல்வரை பாதுகாப்பு இல்லாமல் அழைத்து வந்து சாலையில் ஒரு பெண் சுதந்திரமாக நடந்து செல்ல முடிகிறதா என்று காட்ட விரும்புகிறோம்.

பாதுகாப்பு பலத்துடன் இருந்து கொண்டு சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது என்று முதல்வர் சொல்வதை பார்த்து தமிழக மக்கள் சிரிக்கின்றனர். மக்களின் கொதிப்பு அதிகமாக உள்ளது. சட்டம் ஒழுங்கு குறிப்பாக சென்னையில் அது கிடையாது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொடூரமான கொலை, கற்பழிப்பு கூட்டு பலாத்காரம் இல்லாத நாள் இல்லை. அவர் தமிழகத்தை பற்றித்தான் இவ்வாறு கூறுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 2021 தரவுகளின் அடிப்படையில் போக்சோ, கொடூர குற்றம், கற்பழிப்பு போன்றவை 2020 ஐ விட அதிகம்தான். தனது ஆட்சி அவலங்களை எதற்காக முதல்வர் மறைக்க விரும்புகிறார் என்று தெரியவில்லை.

சட்டம் ஒழங்கு சரியாக இருக்கிறது என்றால் ஏன் தற்போது ஐ.பி.எஸ். அதிகாரிகளை பெரிய அளவில் பணிமாற்றம் செய்துள்ளார். காலையில் சட்டம் ஒழங்கு சரியாக உள்ளது என்று சொல்லிவிட்டு மாலையில் அதிகாரிகளை மாற்றி உள்ளார். இதற்கு என்ன அர்த்தம். அதிகாரிகளை மாற்றினால் மட்டும் இதற்கு தீர்வு ஏற்படாது. தி.மு.க.வினர் போலீசாருக்கு அழுத்தம் கொடுத்து பணியை செய்யவிடாமல் தலையிட்டு வருகிறனர்.

அதை தடுத்து நிறுத்தும்வரை இந்த குற்றங்கள் நடைபெறுவது நிற்காது. கட்சிக்காரர்கள் போலீசாரை வேலை செய்யவிடாமல் தடுப்பதை நிறுத்தினால் மட்டும்தான் தமிழக மக்களுக்கு விமோசனம் கிடைக்கும். திருமாவளவன் பட்டியலின மக்களுக்காக கட்சி நடத்துவதாக சொல்வார். ஆனால், உண்மையில் பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பாக இருந்து கட்சி நடத்துவது பா.ஜ.க. மட்டும்தான்.

தமிழகத்தில் தி.மு.க.வை எதிர்த்து பா.ஜ.க. கொடுத்த குரலில் எது தப்பாக இருந்தது. அனைத்தும் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுத்து வருகிறோம். திருமாவளவனை பயன்படுத்தி கொண்டு அவர்கள் கூட்டணியில் வைத்துள்ளனர். அந்த கூட்டணியில் இருப்பதால் பட்டியலின மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. அவர்களுக்காக இருக்கும் கட்சி பா.ஜ.க. என்பதை திருமாவளவன் விரைவில் உணர்ந்து கொள்வார்.

கச்சத்தீவு இந்த ராமநாதபுரம் மண்ணுக்கு சொந்தமானது. கலைஞர், இந்திராகாந்தி ஆகியோர் தாரைவார்த்து விட்டனர். கச்சத்தீவு பிரச்சனையில் 1976-ல் ரத்து செய்த ஆர்ட்டிகல் 6-ஐ திரும்ப இந்தியா செயல்படுத்த வேண்டும். அதன்மூலம் நாம் மீன்பிடிக்கவும், வலையை உலர்த்தவும் உரிமை கிடைக்கும்.

கச்சத்தீவு பிரச்சனையில் முதல்வர் இரட்டை நிலைப்பாட்டை எடுக்க கூடாது. எனவே கச்சத்தீவு நமக்கு வரும் முன் ஆர்ட்டிகல் 6-ஐ சரிசெய்ய வேண்டும். கச்சத்தீவுக்கு விசா இல்லாமல் செல்ல வழிவகை செய்ய வேண்டும். அதனை மோடியால் மட்டுமே செய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்