பரந்தூர் புதிய விமான நிலையத்தால் தமிழகத்தின் பொருளாதாரம் உயரும் அமைச்சர் உறுதி
புதிய விமான நிலையம் அமைய உள்ள பரந்தூரில் உள்ளூர் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்; பரந்தூர் விமான நிலையத்தால் தமிழகத்தின் பொருளாதாரம் உயரும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சென்னை,
சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. 'பரந்தூர் விமான நிலையம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு தகுந்த தருணத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சி' என்ற தலைப்பில் சென்னை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
சென்னை தொழில் மற்றும் வர்த்தக சபை, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
சென்னை தொழில் மற்றும் வர்த்தக சபையின் தலைவர் டி.ஆர்.கேசவன் வரவேற்றார். தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
மீனம்பாக்கத்தில் கூடுதல் வசதி
அப்போது அவர் கூறியதாவது:-
2030-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த இலக்கை அடைவதற்காகவே பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேவேளையில் தற்போது செயல்பட்டு வரும் மீனம்பாக்கம் விமான நிலையமும் கூடுதல் வசதிகளுடன் செயல்படுத்தப்பட வேண்டும்.
பல்வேறு சவால்கள்
ஏற்கனவே இருந்து வரும் மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்தலாமே, இவ்வளவு தொலைவில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட வேண்டுமா என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது என்பது சாத்தியமில்லாதது. அதற்கு முக்கிய காரணம் தேவையான நிலம் அங்கிருந்து எடுக்க முடியாது என்பது தான்.
புதிய விமான நிலையம் அமைக்க 11 இடங்களை தேர்வு செய்தோம். பல இடங்களை சுற்றி ஏரி, பறவைகள் சரணாலயம், விளை நிலங்கள், மலைப்பகுதி போன்ற பல்வேறு சவால்கள் இருந்தன. பரந்தூர்தான் பல சாதகமான அம்சங்களையும், மிக குறைவான சவால்களையும் கொண்டிருந்தது. இதன்காரணமாகவே புதிய விமான நிலையத்துக்கு பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.
பொருளாதாரம் உயரும்
பரந்தூர் விமானநிலையத்தால் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம், இருப்பிடம், எதிர்கால வாழ்க்கை போன்றவை பாதிக்கப்படாமல் இருப்பதை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார். புதிய விமான நிலையத்தால் உள்ளூர் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
புதிய விமான நிலையம் என்பது காலத்தின் கட்டாயம். புதிய விமான நிலையத்தால் மட்டுமே பயணிகள் சேவை, சரக்கு சேவை போன்றவற்றில் அடுத்த கட்டத்தை எட்ட முடியும். புதிய விமான நிலையத்தால் தமிழகத்தின் பொருளாதாரம் உயரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கேள்விகளுக்கு பதில்
இதன்பின்பு பரந்தூர் புதிய விமான நிலையம் குறித்து தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்கு தமிழக அரசின் தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் பதில் அளித்தார்.
தமிழக அரசின் மாநில திட்டக்குழு உறுப்பினர் மல்லிகா சீனிவாசன், ஆசிய பசிபிக் விமான சேவை நிறுவனத்தின் இயக்குனர் கபில் கவுல், புளூ டார்ட் விமான சேவை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் துளசி மிர்சன்டனே, சர்வதேச சரக்கு விமான சேவை அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பாலசுப்பிரமணியன், இந்திய டிராவல் ஏஜெண்டுகள் சங்கத்தின் தென்மண்டல தலைவர் தேவகி ஆகியோர் பேசினர்.
முடிவில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஜெயஸ்ரீமுரளிதரன் நன்றி கூறினார்.