சுற்றுலாபயணி தவறவிட்ட 10 பவுன் நகையை நேர்மையுடன் ஒப்படைத்த வியாபாரி
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சுற்றுலாபயணி தவறவிட்ட 10 பவுன் நகையை நேர்மையுடன் ஒப்படைத்த வியாபாரி
தென்தாமரைகுளம்,
திருச்சி மாவட்டம் செங்கதிர் சோலை பகுதியை சேர்ந்தவர் அமுதா. இவர் 35 பேர் அடங்கிய குழுவினருடன் நேற்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தார். இவர்கள் காலையில் சூரிய உதய காட்சியை பார்த்துவிட்டு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் அமுதாவின் பர்ஸ் தொலைந்தது. அதில் 10 பவுன் தங்க நகை இருந்தது.
இதனால், அதிர்ச்சி அடைந்த அமுதா தங்க நகையை கோவில் வளாகம் முழுவதும் தேடினார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தநிலையில் அவர் தவறவிட்ட பர்ஸ் மற்றும் தங்க நகையை பகவதி அம்மன் கோவில் வளாகத்தில் பிரசாத கடை நடத்திவரும் வியாபாரி ராமச்சந்திரன் மீட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து சுற்றுலா பயணி அமுதா வரவழைக்கப்பட்டு அவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி முன்னிலையில் பர்ஸ் மற்றும் நகை ஒப்படைக்கப்பட்டது. சுற்றுலா பயணி தவற விட்ட நகையை மீட்டு நேர்மையுடன் ஒப்படைத்த ராமச்சந்திரனை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
-------------
(படம் உண்டு)