பெண்ணாடம்
பெண்ணாடம் சுமைதாங்கி அருகே உள்ள தனியார் சிமெண்ட் கடை முன்பு இருசக்கர வாகனத்தில் பூச்செடிகளுடன் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த சிமெண்ட் கடை உரிமையாளர் பெண்ணாடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த நபர் ஆண்டிமடம் தாலுகா முன்னுரான் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்த அருமைநாதன் மகன் செந்தில்குமார்(வயது 46) என்பதும், இவர் பூச்செடி வியாபாரம் செய்யும் போது இரவு நேரம் ஆகிவிட்டால் வியாபாரம் செய்து வரும் ஊர்களிலே தங்கி வியாபாரம் செய்து வந்ததும், கடந்த 14-ந் தேதி வியாபாரத்துக்காக பெண்ணாடம் பகுதிக்கு வந்ததும் தெரியவந்தது. ஆனால் அவரது சாவுக்கான காரணம் எதுவும் தெரியவில்லை? இதையடுத்து செந்தில்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து செந்தில்குமார் மனைவி பாலசுந்தரி(38) கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.