அதிகபட்சமாக காட்டுமயிலூர், மே.மாத்தூரில் தலா 10 மி.மீ. பதிவு
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக காட்டுமயிலூர், மே.மாத்தூரில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூரியன் சுட்டெரித்தது. கடலூரில் அதிகபட்சமாக 104.5 டிகிரி வெயில் தாக்கியது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகளும் அவதி அடைந்தனர்.
இதற்கிடையில் வெப்பச்சலனம் காரணமாக கடலூரில் கடந்த 5-ந்தேதி மாலை மழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 2,370 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்தும், சாய்ந்து விழுந்தும் சேதமடைந்தன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் கடலூரில் மழை பெய்தது. இது தவிர பரங்கிப்பேட்டை, வேப்பூர், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. ஆனால் கடலூரில் நேற்று காலையில் வானம் சற்று மேக மூட்டத்துடன் இருந்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வெயில் அடித்தது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காட்டுமயிலூர், மே.மாத்தூரில் தலா 10 மில்லி மீட்டர் மழை பெய்தது.
மாவட்டத்தில் சராசரியாக 2.48 மி.மீ. மழை பதிவாகியது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மி.மீ. வருமாறு:- பரங்கிப்பேட்டை-8.6, பண்ருட்டி, வேப்பூர் தலா 6, சேத்தியாத்தோப்பு-5.2, குறிஞ்சிப்பாடி -3.5, வடக்குத்து, கடலூர் தலா 3, கலெக்டர் அலுவலகம் -1.9, அண்ணாமலைநகர் -1.7.