கிணற்றில் குதித்து கொத்தனார் தற்கொலை

அரவக்குறிச்சி அருகே கிணற்றில் குதித்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்று நீரில் தத்தளித்த 3 பேரை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டனர்.

Update: 2023-02-20 18:30 GMT

குடும்ப பிரச்சினை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சாந்தப்பாடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 30). கொத்தனார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு திருமணமாகி காவியா என்ற மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் ரவிச்சந்திரனுக்கும், காவியாவிற்கு அடிக்கடி வீட்டில் குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரவிச்சந்திரன் நேற்று சாந்தப்பாடியில் உள்ள 90 அடி ஆழமுள்ள ஊர்பொது கிணற்றில் குதித்துள்ளார். இதைப்பார்த்த ரவிச்சந்திரனின் சகோதரர் சேகர் (33), ஆறுமுகம் (35), பாலுச்சாமி (30) ஆகிய 3 பேரும் ரவிச்சந்திரனை காப்பாற்ற கிணற்றில் குதித்து உள்ளனர்.

நீரில் மூழ்கி சாவு

ஆனால் 3 பேருக்கும் நீச்சல் தெரியாததால் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கூச்சல் போட்டனர். அதற்குள் ரவிச்சந்திரன் நீரில் மூழ்கி இறந்து விட்டார். சேகர், ஆறுமுகம், பாலுச்சாமி ஆகியோர் கிணற்றின் சுற்றுச்சுவரை பிடித்து கொண்டு இருந்தனர். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அரவக்குறிச்சி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

3 பேர் மீட்பு

பின்னர் கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த 3 பேரையும் கயிறு கட்டி பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் ரவிச்சந்திரன் உடலை தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றில் இருந்து மேலே தூக்கி வந்தனர். பின்னர் ரவிச்சந்திரனின் உடலை அரவக்குறிச்சி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்