மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்;
திருவாரூர் அருகே குன்னியூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலைமறியல்
திருவாரூர் ஒன்றியம் குன்னியூர் ஊராட்சி வடக்கு தெரு, தெற்கு தெரு சாலையை சீரமைக்க வந்த நிதியை முறையாக பயன்படுத்தாததையும், மத்திய அரசின் ஜல் ஜீவன் குடிநீர் திட்டத்தின் வாயிலாக வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் பைப்புகள் செயல்படாமல் இருப்பதையும், குடிநீர் போர் பம்பு செயல்படாமல் உள்ளதை கண்டித்தும், மக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று குன்னியூர் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு கட்சியின் மாநில குழு உறுப்பினர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோமதி, ஒன்றிய செயலாளர் இடும்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் மாலதி, நிர்வாகி மாதவன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடனடியாக சாலைகள் சீரமைத்து தரப்படும் என அதிகாரிகள் அளித்தனர். இதையடு்த்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக திருவாரூர்-திருத்துறைபூண்டி சாலையில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.