பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

கலசபாக்கம் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.;

Update: 2023-10-24 18:45 GMT

கலசபாக்கம் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

விழிப்புணர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகிறது. இதை தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் முருகேஷ் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

குழந்தை திருமணம் தொடர்பாக வரப்பெறும் புகாரின் அடிப்படையில் சமூக நலத்துறை அலுவலர்கள், போலீசார் குழந்தை திருமணங்களை தடுத்து வருகின்றனர்.

அதன்படி 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரின் திருமணம் சமீபத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது.

திருமணம் தடுத்து நிறுத்தம்

கலசபாக்கம் அருகே பத்தியவாடி கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் பெற்றோரால் செய்யப்பட்டு வந்தது.

அந்த சிறுமிக்கு மாப்பிள்ளை பார்க்கப்பட்டு கடந்த 20-ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இதுதொடர்பாக மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகைக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் திருமணம் நடைபெற இருந்த நாளுக்கு முந்தைய நாள் சென்றனர். அங்கு சிறுமிக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து வந்தது.

இதையடுத்து அதிகாரிகள் சிறுமியின் பெற்றோரை சந்தித்து, படிக்கும் வயதில் சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது என்றும், திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்றும் அறிவுரை கூறினர்.

மேலும் திருமணம் செய்து வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துக் கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்