அண்ணாமலை நடத்திய திருமணம் விளம்பரத்துக்கானது -அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு

‘அண்ணாமலை நடத்திய திருமணம் விளம்பரத்துக்கானது' என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Update: 2023-07-09 21:05 GMT

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் கோவூர் சவுந்தராம்பிகை-சுந்தரேஸ்வரர் கோவிலில் ரூ.99 லட்சம் மதிப்பில் புதிய தேர் உருவாக்கப்பட உள்ளது.

இந்த பணியை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

விழாவில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், 'கொளப்பாக்கம், சோமங்கலம், மாங்காடு, போரூர், குன்றத்தூர் திருநாகேஸ்வரம், கிருகம்பாக்கம். பூந்தமல்லி பகுதிகளில் அமைந்துள்ள நவக்கிரக தலங்களை பக்தர்கள் எளிதாக தரிசிக்கும் வகையில் நவக்கிர சுற்றுலாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றார்.

ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசும்போது கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்பு 862 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கோவிலுக்கு சொந்தமான ரூ.4 ஆயிரத்து 795 கோடி மதிப்பிலான 5 ஆயிரத்து 60 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு 500 திருமணங்கள் இலவசமாக நடத்தி வைக்கப்பட்டன. இந்த ஆண்டு 600 திருமணங்கள் நடத்திட அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக 253 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.

விளம்பரத்துக்காக திருமணம்

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடத்தி வைத்த திருமணம் விளம்பரத்துக்காக நடத்தப்பட்ட திருமணம். விளம்பரத்திற்காக நடத்தப்படும் திருமணங்கள் இப்படித்தான் அமையும் என்பதற்கு அண்ணாமலை நடத்தி வைத்த திருமணங்களே சாட்சியாகும்.

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதியில் இயல்பு நிலை ஏற்பட்ட பிறகு கோவிலை திறக்க அனைத்து பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்