படப்பை அருகே வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு பிடிபட்டார்

படப்பை அருகே வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-05 02:15 GMT

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த பூந்தண்டலம் திருப்பதிநகர் முதல் தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி நளினி (வயது 49) யின் சகோதரர் ரவி (43). இவருடைய மகன் கமலக்கண்ணன் சிறு வயது முதலே சென்னையில் தங்கி படித்து வந்தார்.

அப்போது கமலக்கண்ணன் தன்னுடன் படித்து வந்த வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்த ரேணுகா தேவி என்ற பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 2.4.2015 அன்று கமலக்கண்ணன் மாயமானதாக நளினி போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில் அமரம்பேடு ஏரிக்கரையில் வெட்டுகாயங்களுடன் கமலக்கண்ணன் இறந்து கிடந்தார். இந்த கொலை வழக்கு குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி மணிகண்டன் (35), நெல்லை மாவட்டம் பணவடலி சத்திரம் தேவர்காலனி பகுதியை சேர்ந்த குமார் என்ற கோம்பன் (33), வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்த ரேணுகாதேவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பழவத்தி ராமபுரம் பகுதியை சேர்ந்த கோமு என்கிற கோமுபாண்டி (34) கடந்த 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.

இந்த நிலையில் நெல்லையில் கோமுபாண்டி தலைமறைவாக இருப்பதாக வந்த ரகசிய தகவலை தொடர்ந்து மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி மேற்பார்வையில், சோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் தனிப்படையினர் நெல்லை மாவட்டம் சென்று கோமு பாண்டியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்