மோட்டார் சைக்கிளில் விசாரணைக்காக அழைத்து சென்றவர் தப்பி ஓட்டம்
திருவண்ணாமலையில் மோட்டார் சைக்கிளில் விசாரணைக்காக அழைத்து சென்றவர் தப்பி ஓடினார். போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்தனர்.
திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், தர்மபுரியை சேர்ந்தவர் என்பதும், வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ்காரர் ஒருவர், அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு போளூர் சாலை வழியாக சென்றார். திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் வரும் போது அந்த நபர் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடினார்.
இதையடுத்து போலீஸ்காரர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் தப்பியோடிய நபரை பின்தொடர்ந்து சென்றார். அந்த நபர் வேங்கிக்காலில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் அருகில் பதுங்கிய போது அவரை அந்த போலீஸ்காரர் மடக்கி பிடித்தார். மேலும் காரில் அங்கு வந்த போலீசார் அவரை பிடித்து விசாரணைக்காக ஏற்றி சென்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்ட போது, சமீபத்தில் 2 இடங்களில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. அந்த சம்பவங்களில் அவர் தொடர்பில் உள்ளாரா? என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்து செல்வதாக தெரிவித்தனர்.