தொழிலாளியை தீ வைத்து எரித்தவர் கைது

தொழிலாளியை தீ வைத்து எரித்தவர் கைது

Update: 2023-01-16 18:45 GMT

கோவை

கோவை சிங்காநல்லூரில் சாலையோரம் படுத்துகிடந்த தொழிலாளியை தீவைத்து எரித்தவர் கைது செய்யப்பட்டார்.

இந்தபயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தொழிலாளி மீது தீவைப்பு

மதுரையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது30). இவர் கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் சாலையோரம் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார். கடந்த 14-ந்தேதி இரவு சுரேஷ் அந்த பகுதியில் சாலையோரம் படுத்து இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி ஒருவர் திடீரென அவர் மீது டீசலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றார்.

சுரேசின் உடல் முழுவதும் மளமளவென பரவியது. தொழிலாளி சுரேஷ் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 90 சதவீதம் உடல் கருகிய நிலையில், சுரேசை அக்கம், பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவர்,உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். இந்த சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவைத்த மர்ம ஆசாமியை தேடி வந்தனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

இந்த நிலையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒருவர் தீவைத்து எரிப்பது போலவும், தப்பி ஓடுவது போலவும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது, ஊத்தங்கரையை சேர்ந்த சக தொழிலாளியான சுப்பிரமணி (வயது53) என்பவர் சுரேஷ் மீது தீ வைத்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சுப்பிரமணியை பொறி வைத்து பிடித்தனர்.

மற்றொரு தொழிலாளி கைது

அப்போது சுப்பிரமணி போலீசில் அளித்தவாக்கு மூலத்தில், எனதுசொந்த ஊர் ஊத்தங்கரை. நான் கோவையில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தேன். அப்போது சக தொழிலாளியான சுரேஷ் என்பருடன் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கம். சம்பவத்தன்று நாங்கள் இருவரும் மது குடித்த போது, எனது பையில் இருந்த பணத்தை சுரேஷ் எனக்கு தெரியாமல் எடுத்ததாக சந்தேகப்பட்டு கேட்டேன். இதனால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில்ஆத்திரத்தில் அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பாட்டிலில் டீசலை வாங்கி வந்து சாலையோரத்தில் படுத்திருந்த சுரேஷ் மீது தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பிச்சென்றேன் என்றார். இதைத் தொடர்ந்து போலீசார் சுப்பிரமணி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்