கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருடியவர் கைது

கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-16 20:02 GMT

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே ராதாபுரம் கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் வராகேஸ்வரர் கோவிலில் அருள்மணி (வயது 61) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த கோவிலில் கடந்த 10-ந்தேதி தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மண்டகப்படி அபிஷேகம் நடைபெற்ற பின்னர் கோவிலை பூட்டிவிட்டு, பூசாரி அருள்மணி வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் கோவிலில் பூட்டை உடைத்து, உள்ளே வைக்கப்பட்டிருந்த உண்டியலை திருடிச்சென்று, அருகில் உள்ள ஒரு வயலில் உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த கிணற்றில் உண்டியலை போட்டுவிட்டு சென்றுள்ளார்.

நேற்று காலை வழக்கம்போல் பூசாரி அருள்மணி கோவிலுக்கு சென்று பார்த்தபோது உண்டியல் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் ராதாபுரம் மெயின்ரோடு தெருவை சேர்ந்த முருகன்(வயது 46) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், திருட்டில் ஈடுபட்டது அவர்தான் என்பது தெரியவந்தது. மேலும் உண்டியல் பணம் ரூ.10 ஆயிரம் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்