டீக்கடைக்காரரை தாக்கியவர் கைது
டீக்கடைக்காரரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 42). இவர் அதேபகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் கணேசன் டீக்கடையில் இருக்கும் போது அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (23) என்பவர் கடை முன்பு நின்று கொண்டு அழுது கொண்டு இருந்தார். எதற்காக கடை முன்பு நின்று கொண்டு அழுகிறாய் என கணேசன் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ்கண்ணன், கணேசனை கடுமையாக தாக்கி, தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த கணேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்கண்ணனை கைது செய்தனர்.