பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு தாமதமாக வந்த அலுவலர்களை அறைக்குள் விடாமல் நிற்க வைத்த மதுரை கலெக்டர்
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு தாமதமாக வந்த அலுவலர்களை அறைக்குள் விடாமல், அவர்களை மதுரை கலெக்டர் வெளியே நிற்க வைத்தார்.;
குறைதீர்க்கும் கூட்டம்
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை ேதாறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. அதில் கலெக்டர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்கள் வாங்குவார். அதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் அதிக அளவில் வந்து,, தங்களது பிரச்சினைகளை தீர்க்க மனுக்கள் வழங்குவார்கள். இந்த கூட்டம் வழக்கமாக காலை 10.30 மணிக்கு தொடங்கி பகல் 1 மணி வரை நடைபெறும். இந்த கூட்டத்தில் அனைத்து துறைகளை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் அந்தந்த பகுதிகளை சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுக்கும் மனுக்கள், உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலருக்கு வழங்கப்படும். அவர் அந்த மனுவின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பார்.
ஆய்வுக்கூட்டம்
மேலும் பொதுமக்கள் குைறதீர்க்கும் கூட்டம் தொடங்கும் முன்பாக காலை 9.30 மணிக்கு கலெக்டர் தலைமையில் அலுவலர்களின் ஆய்வுக்கூட்டமும் நடைபெறும். இந்த கூட்டத்தில், கடந்த முறை நடந்த குறைதீர்க்கும் கூட்டங்களில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த கூட்டம் முடிந்த பின்புதான் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்.
இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு முன்பாக ஆய்வுக்கூட்டம் நடந்தது. அதில் கலெக்டர் சங்கீதா சரியாக காலை 9.30 மணிக்கு வந்துவிட்டார். ஆனால் அதிகாரிகள் தாமதமாக வந்தனர். அதனால் ஆய்வுக்கூட்டம் தாமதமாக நடத்தப்பட்டு, குறைதீர்க்கும் கூட்டம் 10.30 மணிக்கு பதிலாக 11.30 மணிக்குத்தான் தொடங்கியது. அதனால் பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. எனவே அன்றைய தினம், இனி அலுவலர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு கட்டாயம் வர வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தி இருந்தார்.
25 பேர் மட்டுமே வந்தனர்
அதே போல் நேற்றைய குறைதீர்க்கும் கூட்டத்திற்கு முன்பாக நடந்த ஆய்வுக்கூட்டத்துக்கும் அலுவலர்கள் பலர், காலை 9.30 மணிக்கு வரவில்லை. மொத்தம் 70 அலுவலர்களில் 25 பேர் மட்டுமே சரியான நேரத்திற்கு வந்திருந்தனர். ஆனால் கலெக்டர் சங்கீதா சரியான நேரத்திற்கு வந்து விட்டார். உடனே கலெக்டர் சங்கீதா, ஆய்வுக்கூட்டம் நடைபெறும் அறையின் கதவை மூட உத்தரவிட்டு, அந்த அறையில் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். மேலும் தாமதமாக வரும் அலுவலர்கள் யாரையும் உள்ளே விட வேண்டாம் என்றும் உத்தரவிட்டார்.
அதனால் தாமதமாக வந்த அலுவலர்கள் கூட்டம் நடைபெறும் அறைக்கு வெளியே காத்திருந்தனர். ஆனாலும் கலெக்டர் உள்ளே அனுமதிக்கவில்லை. எனவே அவர்கள் அனைவரும் வேறுவழியின்றி திரும்பிச்சென்றனர். சரியான ேநரத்துக்கு வந்த அலுவலர்கள் மூலம் ஆய்வுக்கூட்டமும், அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டமும் நடந்து முடிந்தது.