மாதனூர் பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும்

மாதனூர் பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-05-22 16:43 GMT

குடியாத்தம்

பாலாற்றில் வெள்ளப்பெருக்கால் துண்டிக்கப்பட்ட மாதனூர் பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.

தரைப்பாலம் துண்டிப்பு

குடியாத்தம் அருகே உள்ளி-மாதனூர் தரைப்பாலத்தை 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த பாலத்தில் வழியாக குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு செல்வார்கள். அதேபோல் குடியாத்தத்தில் இருந்து ஆம்பூர், மாதனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தனர்.

பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடந்த நவம்பர் மாதம் உள்ளி-மாதனூர் பாலத்தின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது. இதனால் 2 மாதமாக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி பள்ளிகொண்டா வழியாக குடியாத்தம் சென்று வந்தனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதனைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் உள்ளி- மாதனுர் தரைப்பாலம் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது போக்குவரத்திற்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் கடந்த 19-ந்தேதி காலை உள்ளி-மாதனூர் பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

இதனால் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் சுற்றி வரும் சூழ்நிலை ஏற்பட்டது. உடனடியாக பாலத்தை சீர் செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து  கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட உள்ளி- மாதனூர் பாலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் போர்கால அடிப்படையில் பாலத்தை சீர் செய்யுமாறு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது உதவி கலெக்டர் தனஞ்செயன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற் பொறியாளர் சம்பத்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்