கள்ளக்குறிச்சியில் ஆற்றுப் பாலத்தில் மோதி கவிழ்ந்த சொகுசு பஸ் 35 பேர் காயம்
கள்ளக்குறிச்சியில் ஆற்றுப்பாலத்தில் மோதி சொகுசு பஸ் சாலையில் கவிழ்ந்தது. இதில் 35 பேர் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து கோவைக்கு நேற்று முன்தினம் இரவு தனியார் சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை திருநெல்வேலி மாவட்டம் வெள்ளப்பேரி பகுதியை சேர்ந்த விஜய்ராஜ் மகன் தங்கராஜ்(வயது 26) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 35 பேர் பயணம் செய்தனர். அந்த பஸ் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு மேல், கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, அங்கு தனியார் பள்ளியின் அருகே கோமுகி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவரில் பஸ் பயங்கரமாக மோதி, சாலையில் கவிழ்ந்தது.
35 பேர் காயம்
பஸ்சில் பயணித்தவர்கள் அபயக்குரல் எழுப்பினர். உடன் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்றனர். மேலும் கள்ளக்குறிச்சி போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தொடர்ந்து, அவர்கள் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு, சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் குன்னூர் பகுதியை சேர்ந்த ராஜா (50), அவரது மகள் ரம்யா (18), திருவண்ணாமலை மாவட்டம் பவித்ரம் பகுதியை சேர்ந்த குமார் மகன் தினகரன் (28), சென்னை ராஜம்மாள் (67), நிர்மலா தேவி (50), டிரைவர் தங்கராஜ் உள்பட 35 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. லேசான காயமடைந்தவர்கள் முதலுதவி சிகிச்சை பெற்று, அங்கிருந்து வீடு திரும்பி சென்றார்கள்.
போக்குவரத்து மாற்றி அமைப்பு
இதற்கிடையே, சாலையின் நடுவில் பஸ் கவிழ்ந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடன் போலீசார், புறவழிச்சாலை வழியாக சென்ற வாகனங்களை கள்ளக்குறிச்சி நகரப்பகுதிக்குள் மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். பின்னர் 2 கிரேன்கள் மூலம் விபத்துக்குள்ளான பஸ் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.