காதல் ஜோடி தனிமையில் இருந்ததை காதலியின் தாய் பார்த்ததால் 50 அடி உயர மாடியில் இருந்து குதித்த சட்டக்கல்லூரி மாணவர் சாவு

சேலத்தில், காதலியுடன் தனிமையில் இருந்ததை காதலியின் தாய் பார்த்ததால் 50 அடி உயர மாடியில் இருந்து குதித்த சட்டக் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-02-04 22:21 GMT

சட்டக்கல்லூரி மாணவர்

தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி ரோடு கே.கே.நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 54). இவர், காரிமங்கலத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சீனியர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சஞ்சய் (18). இவர், சேலத்தில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும், கல்லூரி அருகே சின்ன கொல்லப்பட்டியில் வீடு வாடகை எடுத்து தங்கியிருந்து, தினமும் கல்லூரிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதே தனியார் சட்டக்கல்லூரியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவியும் படித்து வருகிறார். அந்த மாணவி, தனது தாய், தங்கையுடன் கல்லூரி அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். ஒரே கல்லூரியில் படித்து வந்த பழக்கத்தால் மாணவியும், சஞ்சயும் காதலித்து வந்தனர். இருவரும் தனியாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

காதலியுடன் சந்திப்பு

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சஞ்சய் தனது காதலியை பார்ப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார். பின்னர் காதலர்கள் இருவரும் வீட்டின் மொட்டை மாடியில் தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, மாணவியின் தாய் திடீரென எழுந்து பார்த்தபோது, அறையில் தூங்கி கொண்டிருந்த மகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவரை தேடி வீட்டின் மொட்டை மாடிக்கு அவர் சென்றார். அப்போது மகள், சஞ்சய் உடன் நெருக்கமாக பேசிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மாடியில் இருந்து குதித்து சாவு

இதை சற்றும் எதிர்பார்க்காத சஞ்சய் அங்கிருந்து செல்வதற்காக 50 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அஸ்தம்பட்டி உதவி கமிஷனர் லட்சுமி பிரியாவும் அங்கு சென்று மாடியில் இருந்து குதித்து இறந்த சட்டக்கல்லூரி மாணவர் குறித்து விசாரித்தார்.

இதையடுத்து மாணவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவன் சஞ்சய், தன்னுடன் படிக்கும் அந்த மாணவியை தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் 2 பேரும் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாக படித்ததும், அப்போது இருந்தே அவர்களுக்குள் காதல் இருந்து வந்ததும், அதனால் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதனிடையே, மகன் இறந்த தகவல் அறிந்த சஞ்சயின் பெற்றோர் தர்மபுரியில் இருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசில் சரவணன் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, காதலியிடம் சஞ்சய் பேசிக்கொண்டிருப்பதை அவரது தாய் பார்த்துவிட்டதால் பயந்து போய் கீழே குதித்தபோது படுகாயம் அடைந்து இறந்தாரா? அல்லது தவறி விழுந்துவிட்டாரா? என்பது குறித்தும், வீட்டின் மொட்டை மாடியில் நள்ளிரவில் நடந்த சம்பவம் தொடர்பாகவும் சஞ்சயின் காதலி மற்றும் அவரது தாய் ஆகியோரிடம் கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்