காதலனுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொலை செய்த காதலி...? கேரளா போல சென்னையில் சம்பவமா...?

குளிர்பானம் ஒன்றை சிறுமி காதலனுக்கு கொடுத்ததாகவும், அதை சஞ்ஜீவ் குமார் குடித்த பிறகு மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

Update: 2023-04-17 08:14 GMT

சென்னை:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் சஞ்ஜீவ் குமார் (18). இவர் திருப்பூரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 3 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காதலியுடன் தனது பிறந்தநாளை கொண்டாட கடந்த 7-ம் தேதி சொந்த ஊரிலிருந்து சென்னை வந்துள்ளார். பின்னர் இருவரும் ஒன்று சேர்ந்துபல இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். பின்னர், இரவு 10 மணியளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வீடு திரும்ப சஞ்ஜீவ் குமார் காத்திருந்துள்ளார்.

அப்போது, குளிர்பானம் ஒன்றை சிறுமி காதலனுக்கு கொடுத்ததாகவும், அதை சஞ்ஜீவ் குமார் குடித்த பிறகு மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க முன்னதாக சிறுமியின் பெற்றோர், தனது மகள் காதலனுடன் சென்றதை அறிந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து சஞ்ஜீவ் குமாரை தாக்கி மகளை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே, சிறுமியை கடத்தி சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சஞ்ஜீவ் குமார் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்தாராம். பின்னர் வெளியே வந்த அவர் சிறுமியுடன் சுற்றித் திரிந்துள்ளார். இந்த விவகாரத்தில் சிறுமியின் பெற்றோர் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்து கைது செய்ய வைத்துவிடக்கூடாது என்ற பயத்தில் குமார் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து மயக்கினாராம்.

இந்நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட சஞ்ஜீவ் குமாரை அவரது உறவினர்கள் சொந்த ஊரான பரமக்குடிக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லும்போது இறந்துள்ளார். இதுகுறித்து அறிந்த கோயம்பேடு போலீசார் குமாரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தினர்.

முதல் கட்டமாக கோயம்பேடு போலீசார், சிசிடிவி கேமரா காட்சிகள் மூலமாக விசாரிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவில் இளம் பெண் ஒருவர் தனது காதலனுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து கொலை செய்திருந்தார். அதே பாணியில் இதுநடந்ததா? எனவும் விசாரணை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்