குடிநீர் குழாய் உடைப்பில் ஏற்பட்ட பள்ளத்தில் லாரி சிக்கியது

முக்கூடலில் குடிநீர் குழாய் உடைப்பில் ஏற்பட்ட பள்ளத்தில் லாரி சிக்கியது. இதனால் சாலையில் தண்ணீர் ஆறாக ஓடியது.

Update: 2023-07-24 20:29 GMT

முக்கூடல்:

முக்கூடலில் குடிநீர் குழாய் உடைப்பில் ஏற்பட்ட பள்ளத்தில் லாரி சிக்கியது. இதனால் சாலையில் தண்ணீர் ஆறாக ஓடியது.

லாரி சிக்கியது

நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இருந்து விருதுநகர் மாவட்டத்துக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குழாய் பதித்து, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் முக்கூடல்- ஆலங்குளம் மெயின் ரோட்டில் கிராம நிர்வாக அலுவலம் அருகில் சாலையோரம் பதிக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.

இதற்கிடையே நேற்று மதியம் மருதம்புத்தூரில் ஜல்லி கற்கள் லோடு ஏற்றிய லாரி முக்கூடல் வழியாக சேரன்மாதேவிக்கு சென்று கொண்டிருந்தது. முக்கூடல் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதி வழியாக லாரி சென்றபோது, அங்கு திடீரென்று லாரியின் பின்பக்க டயர்கள் சிக்கி பதிந்தன.

ஆறாக ஓடிய தண்ணீர்

இதனால் லாரி இடதுபுறமாக சாய்ந்தது. லாரியில் இருந்த ஜல்லி கற்கள் சாலையில் கொட்டின. சிறிதுநேரத்தில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு பெரிதானதால், அந்த வழியாக தண்ணீர் பீய்ச்சி அடித்து குபுகுபுவென்று வெளியேறியது. இதனால் சாலையில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே குடிநீர் வினியோகத்தை நிறுத்தினர். எனினும் நீண்ட நேரமாக சாலையில் தண்ணீர் வீணாக வெளியேறியவாறு இருந்தது.

தொடர்ந்து சாலையில் சரிந்த லாரியை பொக்லைன் எந்திரங்கள் மூலம் நேராக நிறுத்தி மீட்டனர். குழாய் உடைப்பு ஏற்பட்ட பள்ளத்தில் பெரிய பள்ளமாக இருந்ததால், அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் மாற்றுப்பாதை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்