ஆண்டிமடம், செந்துறை அருகே மாரியம்மன் கோவில்களின் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணம் திருட்டு

ஆண்டிமடம், செந்துறை அருகே மாரியம்மன் கோவில்களின் பூட்டை உடைத்து நகை மற்றும் உண்டியல் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-07-21 19:31 GMT

மாரியம்மன் கோவில்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள புக்குழி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் பூஜை செய்வதற்காக பூசாரி சிந்தனைச்செல்வன் சென்று உள்ளார். அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்றபோது அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 2 கிராம் தாலி குண்டு, சன்னதிக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் கோவில் முன்பு கூடினார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.

இந்த கோவிலில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆனால் கோவில் உண்டியல் திறக்கப்படவில்லை. இதனால் உண்டியலில் ரூ.75 ஆயிரம் இருக்கலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

உண்டியல் உடைப்பு

செந்துறை அருகே உள்ள தளவாய்- செங்கமேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாக கிராம மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அதேபோல் மாரியம்மன் கருவறை பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தாலி செயின் மற்றும் வெள்ளியிலான மணியையும் திருடி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்