தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி பட்டியல் இன்று வெளியீடு..?
தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது.
சென்னை,
தி.மு.க. கூட்டணியில் தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கடும் முயற்சி செய்து பெற்றுள்ளது. இந்த 10 தொகுதிகளிலும் யார்? யார்? போட்டியிடுவது என்பதில், கன்னியாகுமரி தொகுதியில் விஜய்வசந்த், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், சிவகங்கையில் கார்த்தி ப.சிதம்பரம், கிருஷ்ணகிரியில் டாக்டர் செல்லக்குமார் ஆகியோர் போட்டியிடுவதில் எவ்வித தடைகளும் இன்றி தொகுதிகள் எளிதாக இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே கரூர், திருச்சி, திருவள்ளூர், தேனி, ஆரணி ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வு செய்வதிலும், தொகுதிகளை இறுதி செய்வதிலும் கடுமையான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், கடுமையான போட்டியும் நிலவி வந்தது.
கரூர், திருச்சி, தேனி தொகுதிகள் மாற்றப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், கரூர் தொகுதியில் மீண்டும் ஜோதிமணியே வேட்பாளராக இறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது.
அதன்படி திருச்சி, தேனி தொகுதிகள் மாற்றப்படும் என்று இருந்த நிலையில் கூடுதலாக ஆரணி தொகுதியும் மாற்றத்திற்குரிய பட்டியலில் இணைந்து இந்த 3 தொகுதிகளுக்கு பதில் நெல்லை, கடலூர், கள்ளக்குறிச்சி தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் நாடாளுமன்ற தேர்தல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நேற்று மதியம் காணொலி காட்சி மூலம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி மேலிட தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது. மொத்தத்தில் கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், சிவகங்கையில் கார்த்தி ப.சிதம்பரம், கரூர் தொகுதியில் ஜோதிமணி ஆகியோர் போட்டியிட இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எஞ்சிய 5 தொகுதிகளுக்கு பதில் கூடுதலாக ஒரு தொகுதி ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. அதன்படி, ஆரணி, திருவள்ளூர், நெல்லை, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 6 தொகுதிகள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதில் எந்த ஒரு தொகுதி வெளியேற்றப்படும் என்பது கூறமுடியாத நிலையில், எஞ்சிய 5 தொகுதிகளுக்கு கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், கே.வி.தங்கபாலு, டாக்டர் செல்லக்குமார், சசிகாந்த் செந்தில், வக்கீல் சுதா, பிரவீன் சக்கரவர்த்தி, விஷ்ணுபிரசாத், விஸ்வநாதன், எம்.பி.ரஞ்சன்குமார் உள்ளிட்டோர் மோதுவதாக தெரிகிறது. இதில் யார்? யார்? எந்தெந்த தொகுதியில் போட்டியிடப்போகிறார்கள் என்பது விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறது என்ற இறுதிப்பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.