சென்னையில் 1-ந் தேதி மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

சென்னையில் 1-ந் தேதி மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் திருமாவளவன் அறிவிப்பு.

Update: 2022-10-28 18:48 GMT

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி மொழிவழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் மொழிவழி தேசிய உணர்வும், மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வும் அந்தந்த மாநிலம் சார்ந்த மக்களிடையே வளர்ந்து அவை மென்மேலும் வலுப்பெற்று வருகின்றன. எனவே, இந்த நாளை மொழிவழி தேசிய உரிமைநாளாக கடைபிடிப்போம். மொழிவழி அடிப்படையிலான தேசிய உணர்வுகள் மற்றும் மாநில உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள் ஒருபுறம் வலுவாக வளர்ந்து வரும் நிலையில், மத்திய ஆட்சியாளர்கள் அத்தகைய மொழிவழி தேசியத்தையோ மாநில உரிமைகளையோ ஏற்கும் முதிர்ச்சியான ஜனநாயக போக்குகளைக் கொண்டிருப்பதில்லை. எனவே, மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து, மொழிவழி தேசிய உரிமை நாளான நவம்பர் 1-ந் தேதி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. குறிப்பாக, இந்திய கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றை கண்டித்து நடைபெறுகிறது. அந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் மட்டுமின்றி தமிழ்நாடு நலனில் அக்கறை கொண்ட அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்