விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

நெல்லிக்குப்பத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-26 18:45 GMT

நெல்லிக்குப்பம்

கடலூர் கோண்டூரில் இருந்து மடப்பட்டு வரை ரூ.230 கோடி செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது நெல்லிக்குப்பம் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தபகுதியில் சாலையை சரியான முறையில் அளவீடு செய்யாமலும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு சாலையை அகலப்படுத்தாமல் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணமான நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில வக்கீல் பிரிவு துணை செயலாளர் குருமூர்த்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் அண்ணா சிலை முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினா். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அப்போது சாலை விரிவாக்க பணிகளையும், ஆக்கிரமிப்புகளையும் சரியான முறையில் செய்யவில்லை என்றால் போராட்டம் தொடரும் என விடுதை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்