விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தர்ணா

பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்த அனுமதிக்ககோரி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-06 19:03 GMT


பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்த அனுமதிக்ககோரி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

144 தடை உத்தரவு

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே பட்டவர்த்தி தலைஞாயிறு மதகடி என்ற இடத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி அம்பேத்கர் நினைவு நாளில் அவரது உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பிற்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த ஆண்டு அம்பேத்கர் நினைவு தினத்தில் கலவரம் ஏற்படும் என்பதால் பட்டவர்த்திக்கு பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 10 மணி முதல் 10-ந்் தேதி இரவு 12 மணி வரை 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து நூற்றக்கணக்கான போலீசார் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

தர்ணா போராட்டம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ஈழவளவன் தலைமையில் பட்டவர்த்தி செல்வதாக அறிவித்தனர்‌. காவல் துறையினர் கேட்டுக் கொண்டதால் உள்ளூர் நபர்கள் அம்பேத்கர் உருவபடத்திற்கு பட்டவர்த்தி பகுதியில் மரியாதை செய்ய அனுமதிக்கும்படி தெரிவித்திருந்தனர். அதிகாரிகள் கலந்து ஆலோசனை செய்த பின்பும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஈழவளவன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். அனைவரும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே நுழையாதபடி போலீசார் தடுப்புகளை வைத்து தடை செய்தனர். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சென்று அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்த அனுமதி வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

3 மணி நேரம் நடந்தது

பின்னர் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ஈழவளவன் கூறுகையில், அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்துவதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை என்றால் தடையை மீறி பட்டவர்த்தி செல்வதாக அறிவித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருந்தனர்.

பின்னர் வருவாய்துறை சார்பில் பட்டவர்த்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரால் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது. இத்தகவலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போராட்டக்காரர்களை அலுவகத்திற்கு அழைத்து கூறியதன் பேரில் மாலை 6.45க்கு தொடங்கிய போராட்டம் 9.45 மணிவரை 3 மணிநேரம் நடைபெற்ற தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்