விடைத்தாள் திருத்தும் பணிகளை புறக்கணித்து விரிவுரையாளர்கள் தர்ணா

விடைத்தாள் திருத்தும் பணிகளை புறக்கணித்து விரிவுரையாளர்கள் தர்ணா

Update: 2023-05-28 19:18 GMT

அய்யம்பேட்டை அருகே ரெகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விடைத்தாள் திருத்தும் பணிகளை புறக்கணித்து விரிவுரையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விடைத்தாள் திருத்தும் பணி

அய்யம்பேட்டை அருகே ரெகுநாதபுரத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் கடந்த 4 நாட்களாக பட்டய படிப்புகளுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் பேராசிரியர், விரிவுரையாளர்கள் இந்த கல்லூரிக்கு வந்து விடைத்தாள்களை மதிப்பீடு செய்து வருகின்றனர். இதில் நீண்ட தூரத்திலிருந்து வந்திருந்த சில பெண் விரிவுரையாளர்கள் கல்லூரி விடுதியிலேயே தங்கி விடைத்தாள்கள் திருத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இரவு நேரங்களில் இங்கு தங்கியிருக்கும் பெண் விரிவுரையாளர்களிடம் இக்கல்லூரியின் தற்காலிக விரிவுரையாளரும், சில பணியாளர்களும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இது பற்றி பெண் விரிவுரையாளர்கள் நேற்று பணிக்கு வந்த சக விரிவுரையாளர்களிடம் தெரிவித்தனர்.

தர்ணா பேராட்டம்

இதையடுத்து தரக்குறைவாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் விடைத்தாள்கள் திருத்தும் பணியை புறக்கணித்து கல்லூரி படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, கல்லூரி முதல்வர் தமிழரசு, வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் சந்திரன் ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பாதுகாப்பு வழங்கப்படும்

இதில் விடைத்தாள் திருத்தும் பேராசிரியர் மற்றும் விரிவுரையாளர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், தரக்குறைவாக நடந்து கொண்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகளை அவர்கள் மேற்கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்