குட்கா விற்பனை செய்த 25 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சேலத்தில் கடந்த 5 மாதங்களில் குட்கா விற்பனை செய்த 25 பேர் குண்டர் சட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம்:
குட்கா விற்பனை
தமிழகம் முழுவதும் குட்கா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக ரெயிலில் கடத்தி செல்லப்படும் கஞ்சா பொட்டலங்களை ரெயில்வே போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீஸ் உயர் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டுபிடித்து போலீசார் கைது செய்து வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
25 பேர் கைது
சேலம் மாநகரில் குட்கா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்வதுடன் போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை 5 மாதங்களில் குட்கா வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்கள் என 25 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சேலத்தில் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.