போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் விற்பனை

போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் விற்பனை

Update: 2022-07-07 10:38 GMT

திருப்பூர்

திருப்பூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் விற்பனை செய்தவர் மீது நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

வீட்டுவசதி வாரிய நிலம்

திருப்பூர் சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள் முதலிபாளையம் பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் நிலத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். ஆனால் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக கூறி 20-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் வீட்டுமனை பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் நிலம் வாங்கியவர்களிடம் இருந்து 1 சென்ட் முதல் 3 சென்ட் வரையுள்ள நிலத்தை கடந்த ஜனவரி மாதம் முதல் புரோக்கர் துணையோடு நாச்சிப்பாளையத்தை சேர்ந்த தனியார் ஒருவரிடம் இருந்து விலைக்கு வாங்கி பத்திரம் செய்தோம். சிட்டாவில் உரியவர் பெயர் வந்தது. இதை நம்பி நிலத்தை வாங்கி வீடு கட்ட தயாரானோம்.

போலி ஆவணம்

அப்போது அருகில் குடியிருப்பவர்கள் சம்பந்தப்பட்ட நிலத்தில் வில்லங்கம் உள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் ஆவணங்களை சரிபார்த்து வருமாறு கூறினார்கள். கோவையில் உள்ள அலுவலகத்துக்கு சென்று செயற்பொறியாளரை சந்தித்து கேட்டபோது, போலியான ஆவணங்கள் என்று தெரிவித்தார். ஒவ்வொருவரும் ரூ.4 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கொடுத்து விலைக்கு வாங்கினோம். வீட்டுவசதி வாரிய இடத்தை குறி வைத்து இந்த மோசடியில் தனிநபர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். எனவே எங்களுக்கான பணத்தை மீட்டுக்கொடுத்து மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக திருப்பூர் தெற்கு தொகுதி செல்வராஜ் எம்.எல்.ஏ.விடம் முறையிட்டுள்ளனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தொகையை திரும்ப பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டருக்கு, எம்.எல்.ஏ. பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்