சோகத்தூர் ஏரி நிரம்பியது
23 ஆண்டுகளுக்கு பிறகு சோகத்தூர் ஏரி நிரம்பியதால் பொதுமக்கள் ஆடு பலியிட்டு சிறப்பு வழிபட்டனர்.
தர்மபுரி அருகே 365 ஏக்கர் நிலப்பரப்பில் சோகத்தூர் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 450 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மாவட்டத்தில் மழை காலங்களில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பினாலும் சோகத்தூர் ஏரி மட்டும் நிரம்பாத நிலை இருந்தது. இந்த நிலையில் பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பல்வேறு ஏரிகள் மற்றும் கால்வாய்களை தாண்டி கடந்து சோகத்தூர் ஏரியை வந்தடைந்தது. இதனால் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. 23 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சோகத்தூரில் ஏரி நிரம்பியது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் ஆடு பலியீட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். இதையடுத்து தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில், ஒன்றிய செயலாளர் சேட்டு, ஊராட்சி மன்ற தலைவர் காளியம்மாள் மாது, நிர்வாகி பெரியசாமி மற்றும் பலர் சோகத்தூர் ஏரியில் பூக்கள் தூவி வரவேற்றனர். இதேபோன்று வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமையில் பா.ம.க.வினரும் சோகத்தூர் ஏரியில் பூக்கள் தூவி வரவேற்றனர்.