மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கூலித்தொழிலாளி பலி
ஜேடர்பாளையம் அருகே மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம், பாசூருக்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் வேலையை முடித்து விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளில் ஜேடர்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஜமீன்இளம்பள்ளி, அத்திக்காடு பிரிவு ரோடு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அங்கிருந்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சண்முகத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் அவரை காப்பாற்றி சிகிச்ைசக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.