இருள் சூழ்ந்து கிடக்கும் கிணத்துக்கடவு மேம்பாலம்

மின்விளக்குகள் எரியாததால் கிணத்துக்கடவு மேம்பாலம் இருள் சூழ்ந்து கிடக்கிறது.இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Update: 2022-10-09 18:45 GMT

கிணத்துக்கடவு, 

மின்விளக்குகள் எரியாததால் கிணத்துக்கடவு மேம்பாலம் இருள் சூழ்ந்து கிடக்கிறது.இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

எரியாத மின்விளக்குகள்

கோவை-பொள்ளாச்சி சாலையில் கிணத்துக்கடவு பகுதியில் 2½ கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. தொடர்ந்து மேம்பாலத்தின் மேல்பகுதியிலும், கீழ்பகுதியிலும் 700-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. 59 ராட்சத தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணுக்கும் இடையே 10 எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்டு உள்ளது. மின் விளக்குகள் சில நாட்கள் மட்டுமே எரிந்தது. அப்போது இரவில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அதிக வெளிச்சம் இருந்தது.அதன் பின்னர் குறிப்பிட்ட பகுதியில் சில விளக்குகள் மட்டுமே எரிந்தன. இதனால் கும்மிருட்டாக காட்சிஅளித்து வருகிறது. இரவு 10 மணி வரை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள கடைகளில் விளக்கு எரிவதால் ஓரளவு வெளிச்சம் காணப்படும். இரவு 10 மணிக்கு பின்னர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு விடும். அதன் பின்னர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் விளக்குகள் எரியாமல் இருளடைந்து காணப்படுகிறது.

விபத்து ஏற்படும் அபாயம்

இதனால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து கிணத்துக்கடவை சேர்ந்த சி.கண்ணன் கூறியதாவது:- கிணத்துக்கடவு ஊருக்குள் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இரவு நேரங்களில் பெரும்பாலான விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள், இரவு நேரங்களில் கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்களுக்கு சென்று திரும்பும் பொதுமக்கள் கடும் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனை போக்க நெடுஞ்சாலைத்துறையினர் நீண்ட நாட்களாக எரியாத மின்விளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரச்சேரியை சேர்ந்த வியாபாரி ஜே.ஜோதி கூறியதாவது:-கோவை-பொள்ளாச்சி இடையே கிணத்துக்கடவு பகுதியில் மேம்பாலம் கட்டிய பின்னர் மேம்பாலத்தை விட, மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தான் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. ஆனால் கீழ்பகுதியில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. நான்கு வழிச்சாலையில் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு மின்விளக்கு முக்கிய அவசியமாக உள்ளது. அதனால் அனைத்து தூண்களுக்கு இடையே உள்ள விளக்குகளை ஒளிர செய்வது அவசியம். இதனை உடனடியாக தேசிய நெடுஞ்சாலை துறையினர் சரிசெய்ய வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்