மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும்
மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும்;
திருமக்கோட்டை
மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாடு
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட 24-வது மாநாடு தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் மாசிலாமணி தலைமையில் கோட்டூரை அடுத்த ஆதிச்சபுரத்தில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் முன்னிலை வகித்தார். ஆதிச்சபுரம் கடைவீதியில் இருந்து மாரிமுத்து எம்.எல்.ஏ. தலைமையில் தொடங்கிய செங்கொடி ஊர்வலத்தை மாவட்ட செயலாளர் சிவ புண்ணியம் தொடங்கி வைத்தார். மாநாட்டின் கொடியினை மாநில செயலாளர் முத்தரசன் ஏற்றி வைத்தார். தியாகிகள் நினைவு ஸ்தூபியை செல்வராஜ் எம்.பி. திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். மாநாட்டை தேசிய குழு உறுப்பினர் பழனி சாமி தொடங்கி வைத்தார். இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கர்நாடக அரசு கைவிட வேண்டும்
மாநாட்டில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிப்பதை கர்நாடக அரசு கைவிட வேண்டும். 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி தினக்கூலியாக ரூ.600 வழங்குவதோடு இந்த திட்டத்தை நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு விரிவு படுத்த வேண்டும். இளைய தலைமுறையினருக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும்.
மருத்துவம் பொறியியல் மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு உள்ள நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன் வரவேற்றார். முடிவில் கோட்டூர் ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.