காவிரி நீர் விவகாரம்: கர்நாடக அரசு தொடர்ந்து திட்டமிட்டு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது - எடப்பாடி பழனிசாமி

காவிரி நீர் விவகாரம்: கர்நாடக அரசு தொடர்ந்து திட்டமிட்டு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2023-08-12 10:30 GMT

சேலம்,

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது நாங்குநேரி சம்பவத்திற்கு அவர் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கல்வி கற்கின்ற கல்விக்கூடங்களில் சாதிச்சண்டையில் ஈடுபடுவது மிகுந்த வருத்தத்திற்குரியது. மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை ஏற்படுத்துவது கல்விக்கூடம். அந்த இடத்திலேயே இப்படிப்பட்ட நிகழ்வு அதன் தொடர்ச்சியாக வீட்டிற்கு சென்று சகமாணவர் தாக்கப்பட்டது உண்மையில் வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. எதிர்காலத்தில் இதுபோல நிகழ்வுகள் ஏற்படக்கூடாது. திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு இப்படிப்பட்ட சம்பவம் ஏற்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அதிமுக ஆட்சி காலத்தில் சுப்ரீம் கோர்ட்டு வாயிலாக காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்ப்பை பெற்றுள்ளோம்.

அந்த தீர்ப்பின் அடிப்படையில் தான் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்ற தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையில் தான் மாதாந்திர கூட்டம் காவிரி மேலாண்மை ஆணையம் தலைமையில் நடைபெறுகிறது.

கர்நாடக அரசு தொடர்ந்து திட்டமிட்டு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு தேவையான நீரை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் திறந்துவிட மறுக்கிறது. முதல்-அமைச்சர் தேவையான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சி அனைத்தும் ஒன்றாக இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக பெங்களூருவில் கூட்டத்தை ஏற்பாடு செய்தார்கள்.

அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை நிர்பந்தித்தார்கள். அப்போது கெஜ்ரிவால் ஒரு கோரிக்கை வைத்தார். டெல்லி உயர் அதிகாரிகள் மாற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் மசோதா வரும்போது எங்களை ஆதரித்தால் நாங்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறோம் என்று கெஜ்ரிவால் நிபந்தனை விதித்தார். அந்த நிபந்தனையை ஏற்று காங்கிரஸ் உள்பட தேசியக்கட்சிகள், மாநில கட்சிகள் ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. அதேபோல், திமுக தலைவர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட பெங்களூரு கூட்டத்தில் கலந்து கொள்கின்றபோது அவரும் கோரிக்கை வைத்திருக்க வேண்டும்.

காவிரி நீர் விவகாரம் ஒவ்வொரு ஆண்டும் நிகழும் பிரச்சினை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும், எந்த சூழ்நிலையிலும் புறக்கணிக்கக்கூடாது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நீரை திறந்துவிட்டால் தான் பெங்களூரு கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்வோம் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தால் எளிதாக நிறைவேற்றியிருக்கலாம்.

கெஜ்ரிவால் வைத்த கோரிக்கையை நிறைவேற்றி வைத்தீர்கள் அல்லவா...? எதிர்க்கட்சிகள் அனைவரும் நாடாளுமன்றத்தில் வாக்களித்தீர்கள் அல்லவா...? அதைப்போல முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உண்மையில் விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இருந்தால் இவரும் அந்த கோரிக்கையை வைத்திருந்தால் காவிரியில் இருந்து நாம் எளிதாக தண்ணீர் பெற்றிருக்க முடியும்.

ஆனால், முதல்-அமைச்சர் முக ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மக்களைப்பற்றியும் கவலையில்லை, டெல்டா பாசன விவசாயிகள் பற்றியும் கவலையில்லை. கடிதம் எழுதுகிறோம் என்று கூறுகிறார். இதனால் விவசாயிகளுக்கு எந்த பயனும் கிடையாது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையே கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு மதிக்கவில்லை. மு.க.ஸ்டாலின் அங்கம் வகிக்கும் கூட்டணியை மதிக்கவில்லை. அந்த கூட்டணியால் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்?' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்