கீழ்கோர்ட்டு விதித்த இழப்பீடு குறைவானது என நீதிபதி கருத்து-விபத்தில் சிக்கி கால் இழந்த பூ வியாபாரிக்கு ரூ.10¾ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
விபத்தில் சிக்கி கால் இழந்த பூ வியாபாரிக்கு ரூ.10¾ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது
விபத்தில் சிக்கி கால் இழந்த பூ வியாபாரிக்கு ரூ.10¾ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
விபத்தில் கால் இழந்த பூ வியாபாரி
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கணபதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் பூ வியாபாரம் செய்து வருகிறேன். கடந்த 2015-ம் ஆண்டு நடந்த அரசு பஸ் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்தேன். இதில் என்னுடைய இடது காலில் தொடைக்கு கீழ் அகற்றப்பட்டது. மேலும் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து எனக்கு இழப்பீடு கேட்டு கும்பகோணம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த கும்பகோணம் கோர்ட்டு, விபத்தில் சிக்கிய எனக்கு 90 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கு ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது. இந்த தொகை மிகவும் குறைவானது. விபத்தில் சிக்கிய பின்னர் நான் எந்த வேலையும் செய்ய இயலாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளேன். எனவே கும்பகோணம் கோர்ட்டு வழங்கிய இழப்பீட்டு தொகையை ரத்து செய்து, கூடுதலாக இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
ரூ.10¾ லட்சம் இழப்பீடு
இந்த வழக்கை நீதிபதி விஜயகுமார் விசாரித்தார். முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:- மனுதாரர் கோவிலில் பூ வியாபாரம் செய்து வருகிறார். அவர் கோவிலில் பூஜை செய்வதற்கான பூக்களை காலை, மாலை என இருவேளையும் மார்க்கெட்டுக்கு சென்று வாங்கி வர வேண்டியுள்ளது. இந்நிலையில் விபத்தில் சிக்கிய அவரது இடது கால் தொடை பகுதிக்கு கீழ் அகற்றப்பட்டு உள்ளது. அதேபோல் நுரையீரல் பகுதியிலும் ஆபரேசன் செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவ சான்றிதழ்கள் குறிப்பிடுகின்றன.
ஆனால் மனுதாரருக்கு ஏற்பட்ட நிரந்தர குறைபாட்டை மட்டும் கீழ்கோர்ட்டு கருத்தில் கொண்டுள்ளது. அவருக்கு ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பை கருத்தில் கொள்ளவில்லை. எனவே மனுதாரருக்கான இழப்பீட்டுத்தொகையை ரூ.10 லட்சத்து 82 ஆயிரத்து 600 ஆக உயர்த்தி உரிய வட்டியுடன் 12 வாரத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.