பெண்ணுக்கு, காப்பீட்டு நிறுவனம் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதற்கு மருத்துவ செலவு தொகை வழங்காத காப்பீட்டு நிறுவனம், பெண்ணுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நாகை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-03-03 18:45 GMT

வேதாரண்யம்:

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதற்கு மருத்துவ செலவு தொகை வழங்காத காப்பீட்டு நிறுவனம், பெண்ணுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நாகை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவால் பாதிப்பு

வேதாரண்யத்தை அடுத்த விழுந்தமாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் விழுந்தமாவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தொழில்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மேகலா.

இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்கள் சிகிச்சை பெற்று நலமாகி வீடு திரும்பினார்.

மருத்துவ செலவு வழங்கவில்லை

இதற்கான மருத்துவ செலவு ரூ.5 லட்சத்து 17 ஆயிரம் ஏற்பட்டது. நாகராஜனும், மேகலாவும் மாதம் ரூ.300 செலுத்தி தனியார் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பாலிசி பெற்று இருந்தனர்.ஆனால் மேகலா மருத்துவச் செலவு தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்கவில்லை.

இதனால் தனது மனைவிக்கு மருத்துவ செலவு மற்றும் நஷ்டஈடு கேட்டு நாகை நுகர்வோர் நீதிமன்றத்தில் நாகராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்ந்த உடன் காப்பீட்டு நிறுவனம் மேகலாவுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் வழங்கியது.

ரூ.4 லட்சம் இழப்பீடு

இதை தொடர்ந்து நீதிமன்றம் அனைத்து மருத்துவ ஆவணங்களையும் பரிசீலனை செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தட்சிணாமூர்த்தி, நீதிமன்ற உறுப்பினர்கள் கமல்நாத் சிவகாமி செல்வி ஆகியோர் தீர்ப்பு அளித்தனர்.

அந்த தீர்ப்பில் கொரோனாவால் ஏற்பட்ட மருத்துவ செலவு உண்மை என்பதை அறிந்து காப்பீட்டு நிறுவனம் மாதாந்திர காப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொண்டு ஒப்பந்தப்படி மருத்துவ செலவு தொகையை கொடுக்காத செயல் குறைபாடு உள்ளது என்றும், மேகலாவுக்கு மருத்துவ செலவுக்கான தொகை ரூ.3 லட்சமும், நஷ்டஈடாக ரூ.75 ஆயிரமும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.25 ஆயிரமும் என மொத்தம் ரூ.4 லட்சம் வழங்க வேண்டும். இந்த தொகையை 2 மாதங்களுக்குள் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்