கரூரில் 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு
கரூரில் 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது.
வருமான வரித்துறை சோதனை
கரூரில் கடந்த 26-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் சேதப்படுத்தப்பட்டது. அதிகாரிகளும் முற்றுகையிடப்பட்டனர்.
இதனால் அதிகாரிகள் சோதனை செய்யாமல் சென்றுவிட்டனர். இதனையடுத்து மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற சோதனையின் போது கோவை சாலையில் உள்ள ஒரு உணவகத்திற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் `சீல்' வைத்து நோட்டீஸ் ஒட்டி சென்றனர்.
நிறைவு
இந்நிலையில் 8-வது நாளாக நேற்றும் கரூரில் 2 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கரூரில் ஒரு அலுவலகத்தில் இருந்து 2 அட்டை பெட்டிகளை எடுத்து சென்றனர். இதுகுறித்து கேட்டபோது வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
இதேபோல் மற்றொரு அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையின் போது கம்ப்யூட்டர் சி.பி.யு.வை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர். இந்நிலையில் கரூரில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நேற்று முடிவுக்கு வந்துள்ளது.
போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்றனர்
இந்த சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சோதனை நிறைவடைந்து சென்னை, மதுரை, கோவை ஆகிய ஊர்களில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கரூரில் இருந்து புறப்பட்டனர். மேலும், இதுவரை வழங்கிய போலீஸ் பாதுகாப்பையும் திரும்ப பெற்றுக் கொண்டனர்.