மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்: "வேறு திருமணம் செய்யப்போவதாக தகவல் அனுப்பி ஆத்திரமூட்டினாள்" -காதல் மனைவியை கொன்றது குறித்து மாணவர் பரபரப்பு தகவல்
வேறு திருமணம் செய்யப்போவதாக தகவல் அனுப்பி ஆத்திரமூட்டியதால், காதல் மனைவியை கத்தியால் குத்தி நடுரோட்டில் கொன்றதாக மாணவர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
வேறு திருமணம் செய்யப்போவதாக தகவல் அனுப்பி ஆத்திரமூட்டியதால், காதல் மனைவியை கத்தியால் குத்தி நடுரோட்டில் கொன்றதாக மாணவர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
காதல் மனைவி கொலை
மதுரை தெற்குவாசல் சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம், நகை செய்யும் தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள். அதில், 2-வது மகள் வர்ஷா (வயது 19). பிளஸ்-2 முடித்துவிட்டு தட்டச்சு பயிற்சிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கீரைத்துறையை சேர்ந்த பழனி (28) என்பவரை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அடுத்த 40 நாளில் கருத்து வேறுபாடால் கணவன்-மனைவி பிரிந்தனர். அதன்பின்னும் அவர்களுக்குள் பிரச்சினை இருந்து வந்தது.
நேற்று முன்தினம் மதியம் வர்ஷா, சப்பாணி கோவில் தெருவில் உள்ள ஒரு கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த பழனி, அவரை வழிமறித்து பேச முயன்றபோது வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பழனி, கத்தியால் நடுரோட்டில் வர்ஷாவை சரமாரியாக குத்தி கொலை செய்தார். பின்னர் அவர், இரவில் சென்று கீரைத்துறை போலீசில் சரண் அடைந்தார்.
மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது பழனி போலீசாரிடம் கூறியதாவது:-
சட்டக்கல்லூரி மாணவர்
நான் எம்.பி.ஏ., கம்ப்யூட்டர் உள்ளிட்ட படிப்புகளை படித்துவிட்டு, தற்போது சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தேன். நான் ஏற்கனவே காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தபோது வர்ஷாவின் உறவினர் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த பெண் என்னை விட்டு பிரிந்துவிட்டார். அந்த பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால் நான் அவ்வப்போது வர்ஷா வீட்டுக்கு சென்றேன். அப்போது, எனக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்ேடாம்.
மகளை காணவில்லை என்று வர்ஷாவின் பெற்றோர் தெற்குவாசல் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் தேடுவதை அறிந்து, நானும் என் மனைவியும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானோம். அப்போது அவள், என்னுடன்தான் வாழ்வேன் என்று கூறினாள். நாங்கள் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தோம்.
நண்பரின் காரை விற்றேன்
ஆடம்பரமாக வாழ நினைத்தாள். நான் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று வந்தேன். இந்த நிலையில் நண்பர் ஒருவரின் காரை வாங்கி, பணத்தேவைக்காக ரூ.3¾ லட்சத்துக்கு விற்றுவிட்டேன். அதில் கிடைத்த பணத்தின் மூலம் என் மனைவிக்கு நகையும், தீபாவளிக்கு ரூ.50 ஆயிரத்திற்கு புதிய துணிமணிகளும் வாங்கி கொடுத்தேன்.. இந்த நிலையில் எங்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
சம்பவத்தன்று நகை, புத்தாடை மற்றும் வீட்டில் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு வர்ஷா அவளது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டாள்.
இதற்கிடையில் காரை என்னிடம் கொடுத்த நண்பர், காைரயோ அல்லது அதற்குரிய பணத்தையோ தருமாறு தொந்தரவு செய்தார். எனவே வர்ஷாவிடம் நகை மற்றும் பணத்தை கொடுக்குமாறு கேட்டேன். அவர் தரமறுத்ததால் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் கொடுத்தேன். அப்போது போலீசார் விசாரணை நடத்தி, கோர்ட்டு மூலம் இந்த பிரச்சினையை தீர்த்து கொள்ளுமாறு கூறிவிட்டனர்.
வேறு திருமணம்
இந்த நிலையில்தான் வர்ஷா கடந்த 2-ந் தேதி எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினாள். அதில் நான் வேறு ஒருவரை திருமணம் செய்ய உள்ளேன். இனி நான் உனக்கு கிடைக்க மாட்டேன் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். அதனால் மனவருத்தம் அடைந்த நான், அன்றைய தினத்தில் இருந்து தொடர்ந்து மதுகுடித்தேன். நேற்று முன்தினம் நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு வர்ஷா வீட்டின் முன்பு காத்திருந்தேன். அவள் வெளியே வந்தபோது பேச முற்பட்டேன். அப்போது தகராறு ஏற்பட்டதால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தி வர்ஷாவை கொலை செய்தேன்.
இவ்வாறு தங்களிடம் பழனி தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மாந்திரீகம்
மேலும் வர்ஷாவின் வீட்டில் அவளும், நானும் பிரிய மாந்திரீகம் செய்துவிட்டனர். அதனால்தான் அவர் வேறு ஒருவரை திருமணம் செய்யும் முடிவுக்கு வந்துள்ளார் என்றும் போலீசாரிடம் கூறி இருக்கிறார். இந்த கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.