ஓடும் ரெயிலில் தவறி விழுந்த பெண் அடையாளம் தெரிந்தது
ஓடும் ரெயிலில் தவறி விழுந்த பெண் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த நர்ஸ் என்பது தெரிந்தது.
குடியாத்தம் அடுத்த லத்தேரி- காவனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் அதிகாலை ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் இருந்து சுமார் 30 வயது மதிக்கதக்க பெண் தவறி விழுந்து சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்து போன பெண்ணின் செல்போன் அழைப்புகளை வைத்து விசாரணை செய்ததில் அவர் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த கெம்பசமுத்திரம் சமயபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தட்சிணாணாமூர்த்தி மகள் மகள் காவியா (வயது 24) என்பதும், டிப்ளமோ நர்சிங் முடித்து விட்டு சென்னை மணலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி நரிசாக வேலைபார்த்து வந்ததும் தெரியவந்தது.