மாலத்தீவில் இறந்த பெண்ணின் கணவர் உருக்கம் சேர்ந்து வாழத்தான் முடியவில்லை; உடலையாவது ஒப்படையுங்கள்

என் மனைவியோடு வாழத்தான் முடியவில்லை. அவர் இறந்த பின்பாவது உடலை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மாலத்தீவில் இறந்த பெண்ணின் கணவர் உருக்கத்துடன் கூறினார்.

Update: 2022-11-11 17:51 GMT

தண்டராம்பட்டு

என் மனைவியோடு வாழத்தான் முடியவில்லை. அவர் இறந்த பின்பாவது உடலை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மாலத்தீவில் இறந்த பெண்ணின் கணவர் உருக்கத்துடன் கூறினார்.

மாலத்தீவில் தீ விபத்து

மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பலியானார்கள். இவர்களில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா மலையனூர் செக்கடி மல்காப்பூர் கிராமத்தை சேர்ந்த தேன்மொழி (வயது 44) என்பவரும் ஒருவர்.

இவரது கணவர் பாலகிருஷ்ணன் (48) தர்மபுரி மாவட்டம் மோட்டூர் அருகில் உள்ள பையர் நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். பாலகிருஷ்ணன் தனது அக்காள் மகளான தேன்மொழியை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஜெயபிரகாஷ் என்ற மகனும் ஜெயபிரியா என்ற மகளும் உள்ளனர். இதில் ஜெயப்பிரியாவுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது மகன் ஜெயப்பிரகாஷ் நர்சிங் படித்துள்ளார்.

பிரிந்து வாழ்ந்தனர்

கருத்து வேறுபாடு காரணமாக தேன்மொழி- பாலகிருஷ்ணன் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர் இந்த நிலையில் தான் தேன்மொழி பிழைப்புக்காக மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.

தேன்மொழி இறந்தது குறித்து கணவர் பாலகிருஷ்ணனை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சிறிய சண்டையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தோம். எனது மகன் அம்மாவுடன் இருந்து வருகிறான். எனது மகளும் கணவரை பிரிந்து விட்டாள். சில காலம் என்னுடன் இருந்தாள். தற்போது எங்கு இருக்கிறாள் என்று தெரியவில்லை

வாழ ஆசைப்பட்டேன்

எனது மனைவி பிள்ளைகளோடு நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக நான் கூலி வேலை செய்து பிழைத்து வந்தாலும் அவர்களுக்கென்று ஒரு தனி வீட்டை கட்டி உள்ளேன் அதில் அவர்கள் குடும்பமாய் வாழ வேண்டும். என்றைக்காவது என் மனைவியோடு நான் சேர்ந்து வாழ்வேன் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். கொரோனா ஊரடங்குக்கு முன்பு இரு விட்டாரும் சமாதானம் பேசி பஞ்சாயத்தில் எங்கள் இருவரையும் இணைத்து வைத்தனர்.

அதன் பின்பு என் மனைவி கடன் பிரச்சினை இருப்பதால் அதனை தீர்ப்பதற்கு நான் மாலத்தீவு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார். அவர் இறந்த செய்தி கூட எனக்கு தெரியாது கடந்த புதன்கிழமை அவர் இறந்துள்ளார் ஆனால் எனக்கு மறுநாள் தான் தெரியவந்தது. நாங்கள் முறைப்படி பிரியவில்லை. நான் மனைவியுடன் சேர்ந்து வாழ தான் ஆசைப்பட்டேன் ஆனால் முடியாமல் போய்விட்டது. தற்போது எனது மனைவி என்ற உரிமையில் அவளுக்கான இறுதி சடங்கு செய்வதற்கு எனது மனைவி உடலை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.

எதிர்பார்த்தது இல்லை

மனைவியுடன் சேர்ந்து வாழத்தான் முடியவில்லை. இறுதி சடங்கு செய்வதற்காக என்னிடம் என் மனைவியின் உடலை ஒப்படைக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகள் வெளிநாட்டில் என் மனைவி வேலை செய்தாலும் அவரிடமிருந்து எந்த பணமும் நான் வாங்கியது, ஆசைப்பட்டது இல்லை. நான் அதை எதிர்பார்த்ததும் இல்லை.

2 ஆண்டுக்கு ஒரு முறை வந்து போவார். அப்போது கூட என்னிடம் எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல் இருந்து வந்தார். என் பிள்ளைகளும் என்னுடன் இல்லாத நிலையில் என் மனைவியும் இறந்த இந்த துக்க செய்தி எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அவர் தழுதழுத்த குரலில் பதில் அளித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்