பெண்ணை கொடூரமாக கொன்ற கணவர் கைது

கடையம் அருகே பெண் மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை கொடூரமாக கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்;

Update: 2023-06-24 19:00 GMT

கடையம்:

கடையம் அருகே பெண் மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை கொடூரமாக கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

பெண் மர்மசாவு

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மேட்டூர் போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் ரூபன் (வயது 47). இவரது மனைவி பிலோமினாள் (39). இவர்கள் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் காலையில் பிலோமினாள் படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து ரூபன் கடையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து, பிலோமினாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

திடீர் திருப்பம்

அப்போது, பிலோமினாளின் கணவர் ரூபன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் திடீர் திருப்பமாக பிலோமினாளை, ரூபனே கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியானது. இதையடுத்து அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதில், எனது மனைவி பிலோமினாளுக்கும், வேறு ஒரு ஆண் நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த நான் எனது மனைவியை கண்டித்தேன். ஆனால் அவர் இதை கண்டுகொள்ளவில்லை. இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது.

கொடூரக்கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த நான் எனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி நேற்று முன்தினம் பிள்ளைகளை அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு அனுப்பி விட்டேன். நானும், எனது மனைவியும் வீட்டில் தனியாக இருந்தோம்.

இரவில் வீட்டில் பிலோமினாள் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அவரது கழுத்தை நெரித்ேதன். பின்னர் அருகில் கிடந்த தலையணையால் முகத்தை அமுக்கி கொடூரமாக கொன்றேன். இதுகுறித்து எதுவும் நடக்காதது போல் பிலோமினாள் மர்மமான முறையில் இறந்து விட்டார் என்று போலீசுக்கு தகவல் தெரிவித்தேன். எனினும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்னை பிடித்துவிட்டனர்.

மேற்கண்டவாறு ரூபன் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது

இந்த கொலை குறித்து இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து, ரூபனை கைது செய்தார்.

கடையம் அருகே பெண்ணை அவரது கணவரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்