தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த பிரமாண்ட கப்பல்...!
ஓமன் நாட்டில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு பிரமாண்ட கப்பல் ஒன்று வந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் தற்போது பல்வேறு வகை சரக்குகளான, நிலக்கரி, சரக்குபெட்டங்கள், சுண்ணாம்புகல், ஜிப்சம், காற்றாலை இறகுகள், எந்திரஉதிரிபாகங்கள், உரங்கள் மற்றும் உணவு தானியங்களையும் கையாண்டு வருகிறது. தென்னிந்தியாவின் மிகவும் விரும்பப்படும் துறைமுகாக வ.உ.சி. துறைமுகம் விளங்கி வருகிறது.
இந்த துறைமுகத்துக்கு பல்வேறு வகையான கப்பல்களும் வரத்தொடங்கி உள்ளன. சமீப காலமாக பனாமாக்ஸ் வகையை சேர்ந்த ராட்சத கப்பல்கள் தூத்துக்குடிக்கு வந்தன.
இந்த நிலையில் கேப் வகையை சேர்ந்த கேப் பிரீஸ் என்ற ராட்சத சரக்கு கப்பல் முதன் முதலாக நேற்று வ.உ.சி. துறைமுகத்துக்குள் வந்து உள்ளது. இந்த கப்பல் 292 மீட்டார் நீளமும், 45.05 மீட்டர் அகலமும் உடையது. இதன் கொள்ளளவு 1 லட்சத்து 80 ஆயிரம் டன் ஆகும். இதன் மிதவை ஆழம் 11.4 மீட்டர் ஆகும்.
இந்த கப்பல் ஓமன் நாட்டில் உள்ள சலாலா துறைமுகத்தில் இருந்து 92 ஆயிரத்து 300 டன் சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்சத்துடன் வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது. அங்கு 9-வது கப்பல் தளத்தில் நிறுத்தப்பட்டு சரக்குகள் கையாளப்பட்டது குறிப்பிடத்தக்கது.