மாற்று இடம் வழங்கி விட்டு வீடுகளை அகற்ற வேண்டும்
ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கபட்டது. மாற்று இடம் வழங்கி விட்டு வீடுகளை அகற்ற வேண்டும் என்று கடலூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுமக்கள் முடிவு செய்யப்பட்டது.
கடலூர்:
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மாநிலம் வழியாக நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது கடலூர் பெரியகங்கணாங்குப்பம் முதல் மஞ்சக்குப்பம் ஆட்டோ நிறுத்தம் மற்றும் குண்டுசாலை செல்லும் வழியில் (மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் வழி) சாலை அகலப்படுத்தும் பணியும், வடிகால் வாய்க்கால் மற்றும் தடுப்பு சுவர் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது.
இதனால் தேசிய மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி இருந்த 43 பேருக்கு, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் நேற்று முன்தினம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அந்த நோட்டீசில், ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் வருகிற 25-ந் தேதி நெடுஞ்சாலை துறை சார்பில் அகற்றப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று காலை ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். அந்த கூட்டத்தில் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும், வீடுகளை காலி செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் வருகிற 26-ம் தேதி சென்னை நோக்கி நடைபயணமாக சென்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கையை வலியுறுத்தி ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.